இந்தியா

காங்கிரஸ் தேர்தல் குழுக்களுக்கு தலைவர்கள் நியமனம்

தினமணி

மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியில் அமைக்கப்பட்டுள்ள 3 முக்கியக் குழுக்களுக்கு தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 அதன்படி, கட்சியின் மூத்த நிர்வாகிகளான ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, ஆனந்த் சர்மா ஆகியோர் அப்பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
 தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவை பிரதானக் குழு, தேர்தல் அறிக்கை குழு, விளம்பரக் குழு என வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைமை அண்மையில் அறிவித்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனையின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்தக் குழுக்களில் கட்சியின் மூத்த தலைவர்களும், இளைய நிர்வாகிகளும் சரிசமமாக இடம்பெற்றுள்ளனர். மூத்த தலைவர்களின் அனுவபத்தையும், இளையோரின் ஆற்றலையும் ஒருங்கிணைத்தால் கட்சியை கண்டிப்பாக வலுப்படுத்த முடியும் என ராகுல் நம்புவதன் வெளிப்பாடுதான் இது என்று கூறப்படுகிறது.
 அதுமட்டுமன்றி, நாடு முழுவதும் பாஜக அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் பல்வேறு வியூகங்களை வகுக்க வேண்டியது அவசியம் என்று ராகுல் உணர்ந்ததன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
 மூன்று குழுக்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது பிரதானக் குழு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் கட்டுப்பாட்டின் கீழ் அக்குழு இயங்கவுள்ளது. அதில் 9 மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆஸாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரண்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அந்தக் குழுவானது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்குவகிக்கும் எனத் தெரிகிறது.
 அதற்கு ஏ.கே. அந்தோணி தலைவராகவும், ஜெய்ராம் ரமேஷ் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதேபோன்று 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை வடிவமைக்கும் குழுவுக்கு சிதம்பரம் தலைவராகவும், ராஜீவ் கெளடா ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 13 பேர் கொண்ட விளம்பரக் குழுவைப் பொருத்தவரை அதன் தலைவராக ஆனந்த் சர்மாவையும், ஒருங்கிணைப்பாளராக பவன் கேராவையும் காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT