இந்தியா

மக்கள்தான் எஜமானர்கள்: வாராணசியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

DIN


மக்கள்தான் தனக்கு ஆணையிடும் உயர் அதிகாரம் கொண்ட எஜமானர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரு எம்.பி.யாக வாராணசி தொகுதிக்கு கடந்த நான்காண்டுகளில் தாம் மேற்கொண்ட பணிகளால் அந்த நகரமே புதுப்பொலிவு அடைந்திருப்பதாகவும் அவர் பெருமைபட கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாராணசிக்கு (காசி) இரு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற முறையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டப் பணிகளை நேரடியாக அவர் கண்காணித்தும் வருகிறார். இந்நிலையில், ரூ.550 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா அந்நகரில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அந்தப் பல்கலைக்கழகத்தில் கோட்ட அளவிலான கண் சிகிச்சை மையத்தை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியதுடன், புதிதாக கட்டப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தையும் தொடக்கி வைத்தார். மேலும், ஒருங்கிணைந்த மின் உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
மக்களவை உறுப்பினராவதற்கு முன்பு பல முறை வாராணசிக்கு (காசி) வந்துள்ளேன். அப்போது எல்லாம் இந்த நகரம் இருக்கும் நிலையை எண்ணி வருத்தமடைந்திருக்கிறேன். மேலே செல்லும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்ததும், காசி நகரம் முழுவதும் மாசடைந்து காணப்பட்டதும் என்னை வெகுவாக பாதித்தது.
அந்தத் தருணத்தில் ஆண்டவன்தான் இந்த மக்களையும், நகரையும் காப்பாற்ற வேண்டிய நிலை இருந்தது. ஏனெனில், முந்தைய ஆட்சியாளர்கள் எவரும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இதைப் பார்த்து விரக்தியடைந்த மக்கள், புண்ணிய பூமியான காசியை காக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும், உறுதியையும் பூண்டு புதிய மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் விளைவாக இந்தத் தொகுதியின் (வாராணசி) எம்.பி.யாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
மக்களின் ஆணைப்படி பிரதமராகப் பதவி வகித்தாலும், வாராணசி எம்.பி. என்ற முறையில் எனக்கு பல்வேறு பொறுப்புகளும், கடமைகளும் இருக்கின்றன. தொகுதியின் மேம்பாட்டுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயின் விவரங்களையும் உங்களிடம் தெரியப்படுத்த வேண்டியது எனது தலையாய பணிகளில் ஒன்று.
ஏனெனில், மக்களாகிய நீங்கள்தான் எனக்கு முதலாளிகள். நீங்கள்தான் எனக்கு ஆணையிடும் உயர் அதிகாரிகள். கடந்த நான்காண்டுகளாக இந்தப் பகுதியை வளப்படுத்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அதன் பலனை நீங்கள் கண் முன்னே பார்த்து வருகிறீர்கள். அதற்கு சாட்சியாகவும் இருக்கிறீர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புனரமைக்கப்படாமல் இருந்து வந்த காசி, தற்போது ஒளிர்ந்து வருகிறது. சர்வதேசத் தரத்தில் அந்நகரை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த எத்தனையோ தலைவர்கள் தற்போது காசிக்கு வருகை தருகின்றனர். அவர்கள் அனைவரும் இங்குள்ள விருந்தோம்பலையும், சூழலையும் வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.
வாராணசி நகரம் கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. அதை மேம்படுத்த வேண்டியது அத்தியாவசியமான ஒன்று. அதைக் கருத்தில்கொண்டே பல்லாயிரம் கோடி மதிப்பிலான சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகள், புனரமைப்புப் பணிகள், பொலிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT