இந்தியா

இந்தியா-பிரான்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

DIN


பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் சென்ற நிலையில், இந்தியா-பிரான்ஸ் இடையே தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையெழுத்தாகின. 

மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, முதல்கட்டமாக பிரான்ஸுக்கு வியாழக்கிழமை சென்றார். அங்கு பாரீஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஷான்டிலி மாளிகையில் அதிபர் இமானுவல் மேக்ரானை சந்தித்துப் பேசினார். இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவு குறித்து இரு தலைவர்களும் சுமார் 90 நிமிடங்கள் பேச்சு நடத்தினர். 

அதையடுத்து இரு நாட்டு குழுக்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்தியா-பிரான்ஸ் இடையே திறன்மேம்பாடு, வான்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 
அப்போது அதிபர் மேக்ரான் பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட முடிவு தொடர்பாக பிரதமர் மோடி விளக்கினார். 
அந்த விவகாரம் இந்தியாவின் இறையாண்மைக்கு உள்பட்டதாகும். காஷ்மீர் விவகாரத்துக்கு இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் இதர நாடுகள் தலையிடக் கூடாது என்றும் பிரதமர் மோடியிடம் கூறினேன் என்றார். 

பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை தடுப்பது, பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும். இரு நாடுகளுமே அவ்வப்போது பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. 
பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற சவால்களை இந்தியாவும்-பிரான்ஸும் ஒன்றாக எதிர்கொள்கின்றன என்றார். 
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலும், பிரான்ஸிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த இரு தலைவர்களும், பயங்கரவாதச் செயல்களை எந்த வடிவிலும் சகித்துக்கொள்ள இயலாது என்று கூறினர். சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க அதிபர் மேக்ரான் ஒப்புதல் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பரஸ்பரம் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வதில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை வலுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. 

பிரதமர் எட்வர்டுடன் சந்திப்பு: பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் சார்லஸ் பிலிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். 
இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவின் அனைத்து விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று கூறியுள்ளார். 

யுனெஸ்கோ தலைமையகத்தில்: பின்னர் யுனெஸ்கோ தலைமையகத்துக்குச் சென்று, அதன் தலைமை இயக்குநர் ஆட்ரி அஸுலேவுடன் உரையாடிய பிரதமர் மோடி, பின்னர் இந்திய சமூகத்தினரிடையே பேசியதாவது: 
புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காகவே இந்தியர்கள் மீண்டும் பாஜகவை வெற்றிபெறச் செய்துள்ளனர். ஊழல், மக்கள் பணம் சுரண்டப்படுவது, பயங்கரவாதம் போன்றவை முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 
முத்தலாக்குக்கு தடை, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற முக்கிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை இந்தியா அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எட்டிவிடும். 2025-ஆம் ஆண்டுக்குள்ளாக காசநோய் இல்லாத நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி பேசினார். 

ஐக்கிய அரபு அமீரகம் பயணம்: பிரான்ஸ் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT