இந்தியா

மேற்கு வங்கம்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி நால்வர் சாவு

DIN


மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கோயிலில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 
விபத்து காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை மருத்துவமனையில் சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
லோக்நாத் பிரம்மச்சாரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கசுவா லோக்நாத் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் லோக்நாத் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். 
அப்போது திடீரென அங்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால், கோயிலுக்கு வரும் பாதையில் மூங்கில் கொண்டு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் மக்கள் ஒதுங்கினர். 
அங்கு கூடியவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மழை காரணமாக அந்த மூங்கில் கட்டுமான கடைகள் சரிந்தன. அந்தக் கடைகள் மிகவும் குறுகலான சாலையில் இருந்ததால் மூங்கில் கட்டுமானம் சரிந்ததை அடுத்து அங்கிருந்து வெளியேற முயன்ற கூட்டத்தினரிடையே நெரிசல் ஏற்பட்டது. 
அப்போது அருகில் இருந்த கோயிலின் குளத்தில் சிலர் விழுந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கூச்சல் குழப்பம் ஏறப்பட்டது. 
இந்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்துவிட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பராசத் மருத்துவமனை, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
சம்பவ இடத்தில் காவல்துறையினர் தலைமையில் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, சூழ்நிலை இயல்பாகியுள்ளது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 
கசுவா லோக்நாத் கோயிலில் மாநில அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யாததே இந்த விபத்துக்கு காரணம் என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் விமர்சித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT