முகப்பு
இந்தியா

பண மதிப்பிழப்பால் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் இல்லை: பிரதமர் அலுவலகம்

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதன் தாக்கத்தால் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 14 பிப்ரவரி 2019, 12:50 am IST
பகிர்:


பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதன் தாக்கத்தால் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி இரவு நாட்டு மக்களிடையே திடீரென உரையாற்றிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்தார். இதனால், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் மதிப்பில் சுமார் 86 சதவீதம் மதிப்பிழப்பானது. 
அதற்குப் பதிலாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக விநியோகிக்கப்பட்டது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை திரும்பச் செலுத்தவும், புதிய நோட்டுகளை பெறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக நாடு முழுவதும் சிலர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. 
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தால் உயிரிழந்தோர் குறித்த தகவல்களைக் கோரி நீரஜ் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். 
எனினும், 30 நாள்களுக்குள்ளாக தனக்கு உரிய பதில் கிடைக்காததை அடுத்து அவர் மத்திய தகவல் ஆணையத்தை நாடினார்.
ஆணையத்தின் விசாரணைக்காக பிரதமர் அலுவலகத்தின் மத்திய மக்கள் தொடர்பு அதிகாரி ஆஜரானார். அப்போது, நீரஜ் சர்மா கோரிய தகவலை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். எனினும், நீரஜ் சர்மா கோரியது, தொடர்பான தகவல் எதுவும் பராமரிக்கப்படவில்லை இல்லை என்று அவர் ஆணையத்தில் தெரிவித்தார். 
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தங்களது வாடிக்கையாளர் ஒருவர் பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் உயிரிழந்ததாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மூவர் தெரிவித்ததாக கூறினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய உயிரிழப்பு ஒன்றை அரசு ஒப்புக் கொண்டது அது முதல் முறையாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.