இந்தியா

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

DIN

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்வதற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு நளினி சிதம்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக,  சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், நளினி சிதம்பரத்துக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 
சாரதா குழும நிறுவனங்களின் நிதி மோசடிக்கு நளினி சிதம்ரம் உடந்தையாக இருந்ததாகவும், அந்த நிறுவனத்தின் ஆலோசகராக இருந்து ரூ.1.4 கோடியைப் பெற்றுள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனு நீதிபதி ஜாய்மல்யா பாக்சி தலைமையான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரதீப் கோஷ், இந்த வழக்கில் 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் நளினி சிதம்பரத்தின் பெயர் இடம் பெறவில்லை. 
ஆனால், கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட 6-ஆவது துணைநிலை குற்றப்பத்திரிகையில்தான் அவரது பெயர் சேர்க்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்த 6 வாரத்துக்கு நளினி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்யக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு நளினி சிதம்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து ரூ.2,500 கோடி வரை வசூலித்து விட்டு, உரிய முறையில் பணத்தை திருப்பித் தரவில்லை. 
இந்த நிதி மோசடி தொடர்பான வழக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு சிபிஐ வசம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது.
சாரதா நிறுவனத்துக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்காக  நளினி சிதம்பரம் நியமிக்கப்பட்டார். நளினி சிதம்பரமும், சாரதா குழு உரிமையாளர் சுதீப்தா சென் உள்ளிட்டோரும் சாரதா குழுமத்தின் நிதியை வேறு வழிகளில் பயன்படுத்தியது, வேண்டுமென்றே ஏமாற்றியது போன்ற சதிச் செயல்களில் ஈடுபட்டனர்; இதற்கு ஆலோசனை வழங்கியதற்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாரதா குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.1.4 கோடியை நளினி சிதம்பரம் பெற்றுள்ளார் என்பது சிபிஐ-யின் முக்கியக் குற்றச்சாட்டுகளாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT