புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், உரிமையாளர் அடையாளம் தெரிந்தது
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளரின் விவரங்களை தேசியப் புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) கண்டறிந்துள்ளனர்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளரின் விவரங்களை தேசியப் புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து, என்ஐஏ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை கூறியதாவது:
தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து சிதறி விழுந்த உலோகத் துண்டுகளை வைத்து, தடயவியல் நிபுணர்கள், ஆட்டோமொபைல் நிபுணர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அதன் உரிமையாளரின் விவரங்களை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.
அந்த கார், கடந்த 2011-ஆம் ஆண்டில் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜலீல் அகமது என்பவருக்கு முதலில் கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதன் பிறகு அந்தக் கார் ஏழு பேரிடம் கைமாறி, இறுதியாக, தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியைச் சேர்ந்த சஜத் பட் என்பவரை வந்தடைந்துள்ளது. சோபியானில் உள்ள மதரஸாவில் பயிலும் மாணவரான சஜத் பட், அந்தக் காரை கடந்த 4-ஆம் தேதிதான் வாங்கியுள்ளார்.
அவரிடம் இருந்து அந்தக் கார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிஜ்பெஹாராவில் உள்ள சஜத் பட்டின் வீட்டில் தேசியப் புலனாய்வு அமைப்பு மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
அப்போது அவர் வீட்டில் இல்லை. தலைமறைவாக இருக்கும் அவர், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றார் அவர். இதனிடையே, சஜத் பட் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.