இந்தியா

மோடியின் ஆட்சியின்கீழ் அரசியலமைப்பு நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன: முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

DIN


மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஆட்சியின்கீழ், உச்சநீதிமன்றம், சிபிஐ போன்ற அரசியலமைப்பு நிறுவனங்கள் அழிக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், பிரதமரிடம் அளிக்கப்படுவதற்குப் பதிலாக, உயர்நிலை குழுவுக்கு ஏன் அளிக்கப்படவில்லை என்பதற்கான காரணம் இல்லை. இதேநிலைதான் நீதித்துறை நியமனங்களிலும் உள்ளது. எனவே நீதிபதிகளை தேர்வு செய்ய சுயேச்சையான அமைப்பு நமக்கு தேவைப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உச்சநீதிமன்றம், சிபிஐ போன்ற அரசியலமைப்பு நிறுவனங்கள், மத்தியில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசால் அழிக்கப்பட்டு வருகிறது. தேசிய போர் நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் பேசியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. தேசிய போர் நினைவிட திறப்பு விழாவுக்கு சென்று, அதில் பிரதமர் அரசியல் பேசுவார் என யாராவது எதிர்பார்ப்பார்களா? ஆனால் இது நடைபெற்றுள்ளது. இதுகுறித்து யாராவது கேள்வி கேட்பார்களா?
இந்திய அரசியல் நிலவரம் குறித்து வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது விமர்சிக்கப்படாத உயரிய நாகரிகம் இருந்தது. ஆனால் தற்போது அப்படியில்லை. வெளிநாடுகளில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின்போது இந்திய அரசியல் குறித்து மோடி பேசுகிறார். இதுகுறித்து யாராவது அக்கறை கொண்டார்களா?
அதேபோல்தான், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் கொள்கை குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பேட்டியளிக்காத நடைமுறையும் இருந்தது. இந்த விதி தற்போது கடைப்பிடிக்கப்படுகிறதா? எதுவும் நடைபெறாத வரையில், இதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால், இதனால் ஆபத்து உருவாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், மூத்த நீதிபதி ஒருவர் பதவி ஓய்வு பெறுகிறார். பின்னர் அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிர்ப்பந்தத்தில் இருப்பதாக பேட்டியளிக்கிறார். இதன்மூலம், உச்சநீதிமன்றமும் சமரசத்துக்கு உள்ளாகியிருப்பது தெரிகிறது என்றார் யஷ்வந்த் சின்ஹா.
முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான அதிருப்தியால் பாஜகவில் இருந்து விலகினார். இதையடுத்து, பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT