இந்தியா

குமரியில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

DIN

சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைத் தரும் கன்னியாகுமரி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்த் குமார் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை இரவு ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: 
ரயில்வே துறையில் 13 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஆனால், தற்போது வெளிநாட்டு முதலீடு, ரயில்வே வழித்தடம் தனியார்மயம் நடவடிக்கையால் ரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சுமார் 1.30 கோடி குடும்பத்தினர் ரயில்வே ஊதியத்தை நம்பி வாழ்கின்றனர். ஆகவே, ரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட மாட்டாது எனும் உறுதிமொழியை ரயில்வே அமைச்சரும், பிரதமரும் அளிக்க வேண்டும்.
கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அங்குள்ள ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து தங்குவர். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். 
மேலும், பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில் புறப்படும் இடத்தை தாம்பரத்தில் இருந்து எழும்பூருக்கு மாற்ற வேண்டும். புதிய ரயில்வே கோட்டமாக கன்னியாகுமரி உருவாக்கப்பட வேண்டும்.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோயில் வழியாக திருவனந்தபுரத்திற்கு நள்ளிரவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் கழிப்பறை, குடிநீர், பயணிகள் தங்கும் அறை, வைஃபை வசதி போன்ற வசதிகள் அளிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி- கன்னியாகுமரி, மதுரை- கன்னியாகுமரி இடையேயான இரட்டை அகல ரயில் பாதைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். 
மதுரை சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோன்று, தேஜஸ் விரைவு ரயிலையும் நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT