இந்தியா

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்எல்லையில் அனுமதி

DIN

பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்எல்லையில் பறப்பதற்கு விதித்திருந்த தடையை சுமார் நான்கரை மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் நீக்கியுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் வான்வெளி வழியாகப் பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இந்திய விமானங்கள், செவ்வாய்க்கிழமை முதல் அப்பகுதியின் வழியாக மற்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்துள்ள அந்த அமைப்பின் முகாம்களைக் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி இந்திய விமானப்படையினர் தாக்கி அழித்தனர். இத்தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் வான்பரப்பு முழுவதிலும் விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதேபோல், இந்தியாவும் தனது வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்தது.
பின்னர், இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்எல்லையில் பறப்பதற்கு பாகிஸ்தான் அரசு கடந்த மார்ச் 27-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்திய அரசு விதித்த தடையின் காரணமாக பாங்காக், கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு பாகிஸ்தான் அரசால் விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவியது. இதனால், அந்நாட்டு விமான நிறுவனங்கள் சிக்கலை எதிர்கொண்டன.
பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக, இந்திய விமானங்கள் அப்பகுதியின் வழியாகச் செல்லாமல், மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இந்திய விமான நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் திங்கள்கிழமை நள்ளிரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பயணிகள் விமானங்கள் உள்ளிட்ட அனைத்துவகை விமானங்களும் சென்று வருவதற்கான பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாகத் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் நிம்மதி:   பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்எல்லையில் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இது தொடர்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், இரு நாடுகளின் சார்பிலும் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டன. இதையடுத்து, இருநாட்டு விமானங்களும் திறக்கப்பட்ட வான்வெளி வழியாகப் பயணத்தைத் தொடங்கின. இதனால், விமான நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்குவதற்கான செலவு ரூ.20 லட்சம் வரை குறையும்' என ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நான்கரை மாதங்களாக பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டிருந்ததால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.491 கோடியும், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.25.1 கோடியும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு ரூ.30.73 கோடியும் இழப்பு ஏற்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT