இந்தியா

சந்திரயான் -2 வெற்றி: தலைவர்கள் வாழ்த்து

DIN


நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை மதியம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: அறிவியல் துறையில் புதிய உச்சங்களை இந்தியா எட்டும் வகையில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எனது வாழ்த்துகள். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம். நிலவின் தென்பகுதியில் இப்போதுதான் முதல்முறையாக ஆய்வு நடைபெறவுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு: சர்வதேச அளவில் நான்காவது நாடாக நிலவில் இறங்கி சோதனை செய்யும் வகையில் விண்கலத்தை அனுப்பியுள்ளது இந்தியா. இந்த வெற்றியில் பங்களித்த இஸ்ரோ விஞ்ஞானிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விண்கலம், ராக்கெட் என அனைத்தும் முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பு என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.
பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவுகளில், இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணம் இது. 
சந்திரயான் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதன் மூலம் நமது விஞ்ஞானிகளின் திறமை வெளிப்பட்டுள்ளது. நாட்டின் 130 கோடி மக்களுடன் இணைந்து அறிவியல் துறையில் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளோம். இது முழுவதும் நமது உள்நாட்டுத் தயாரிப்பு என்பது நாம் கூடுதலாகப் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். 
இதன் மூலம் நிலவை ஆய்வு செய்வதில் நாம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். நிலவு குறித்த பல புதிய தகவல்களை நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் என்று கூறியுள்ளார். அத்துடன் சந்திரயான் விண்கலத்தை சுமந்தபடி ராக்கெட் விண்ணில் பாய்வதை பெரிய திரையில் தான் நேரில் பார்க்கும் படத்தையும் சுட்டுரையில் அவர் பகிர்ந்துள்ளார்.
சந்திரயான் விண்கலம் ஏவப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். 
உள்துறை அமைச்சர் அமித் ஷா: விண்வெளி ஆய்வுத் துறையில் நமது நாடு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களால் நமது தேசம் பெரும் கொள்கிறது. நமது அரசு அமைப்புகள் அனைத்தும் முழுத்திறமையுடன் பணியாற்ற வாய்ப்பளித்து வரும் பிரதமர் மோடிக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது. முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சாதனையை வசமாக்கிய விஞ்ஞானிகள் உள்பட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு வால் பெருமளவில் நிதி ஒதுக்கி தொடங்கி வைக்கப்பட்ட விண்வெளி ஆய்வு அமைப்பு இப்போது பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இப்போது சந்திரயான் விண்கலம் ஏவப்பட்டுள்ள நிலையில் அவரை நினைவுகூர இது சிறந்த தருணமாக உள்ளது. 
கடந்த 2008-இல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்தான் சந்திரயான் - 2 திட்டத்துக்கு நிதி ஒதுக்கி உத்தரவிட்டார் என்பது போன்ற விஷயங்களை இந்த சமயத்தில் நினைவுகூர வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. ஆனால், இதிலும் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் வாழ்த்து: ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயாளர் பையாஜி ஜோஷி அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நமது விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT