இந்தியா

மசூத் அஸார் எங்கள் நாட்டில்தான் இருக்கிறார்: பாகிஸ்தான் ஒப்புதல்

DIN


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார், தங்கள் நாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:
மசூத் அஸார் பாகிஸ்தானில்தான் உள்ளார். எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, அவர் உடல் நலம் குன்றியுள்ளார். தனது இருப்பிடத்தை விட்டுக் கூட வெளியேற முடியாத அளவுக்கு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மசூத் அஸாரின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புதான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான போதிய ஆதாரங்களை இந்தியா எங்களிடம் அளித்தால், பாகிஸ்தானின் சட்டங்களுக்கு உள்பட்டு மசூத் அஸார் மீது உரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம்.
இதுதொடர்பாக இந்தியா அளிக்கும் ஆதாரங்கள் உறுதியானதாகவும், பாகிஸ்தான் நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மசூத் அஸாருக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்வதை பாகிஸ்தான் மக்களிடமும், நீதிமன்றங்களிடமும் நாங்கள் நியாயப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ஏற்ற வகையில் இந்தியா அளிக்கும் ஆதாரங்கள் வலுவானதாக இருக்க வேண்டும்.
பாகிஸ்தானின் நல்லெண்ணத்தையும், இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிப்பதற்கான விருப்பத்தையும் பறைசாற்றும் வகையிலேயே இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை விடுவிக்க முடிவு செய்தோம் என்று சிஎன்என் தொலைக்காட்சியிடம் முகமது குரேஷி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

SCROLL FOR NEXT