இந்தியா

பாடநூல்களில் வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறு : வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

DIN


மனித சமுதாயம் நலமுடன் வாழ நல்ல கருத்துகளைக் கூறிய ஸ்ரீ வேதாந்த தேசிகர் போன்றோரின் வாழ்க்கை வரலாறு, பாட நூல்களில் இடம் பெற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். 
வேதாந்த தேசிகரின் 750-ஆவது பிறந்த ஆண்டை ஒட்டி  அவரது நினைவாக அஞ்சல் துறையின் சார்பில் நினைவு அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்வு புது தில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் இல்ல அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
அதில், வேதாந்த தேசிகரின் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு வெங்கய்ய நாயுடு பேசியதாவது: 
மனித சமூகத்தின் மேன்மைக்காக மகான் வேதாந்த தேசிகர் நல்ல பல கருத்துகளைக் கூறியுள்ளார். அவரைப் போன்ற மாபெரும் மகான்களின் வாழ்க்கை வரலாறு, அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற வேண்டும். 
அதுதான், மானுடவியல், அமைதி, கருணை ஆகியவை தொடர்பான உயர்ந்த கொள்கைகளை குழந்தைகள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க உதவும். 
ஸ்ரீவைஷ்ணவ பாரம்பரியத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த மகான்களில் ஒருவராக வேதாந்த தேசிகர் இருந்தார். இந்த மண்ணில் வாழ்ந்த சிறந்த மகான்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். அவரது அஞ்சல் தலையை வெளியிடுவது அவருக்கு செய்யும் சிறந்த புகழஞ்சலி மட்டுமின்றி, அவரின் வழியைப் பின்பற்ற இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதாகவும் அமையும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் பேசுகையில், ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் மதம், மொழி, இனம், ஜாதியைக் கடந்து அனைவரையும் நேசித்தனர். அவர்கள் கருத்துகள் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கானதாக இருந்தது என்றார். 
அஞ்சல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் விஷ்வாபவன், ஸ்ரீ வேதாந்த தேசிக மணிபாதுகா இந்திரப் பிரஸ்தா டிரஸ்ட் நிறுவன அரங்காவலர் ஆர். ஸ்ரீராமன், தில்லி முத்தமிழ்ப் பேரவை செயலர் என்.கண்ணன், ஸ்ரீவெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் பெ.ராகவன் நாயுடு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் இரா.முகுந்தன் வரவேற்றார்.  தில்லி, லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யா பீடத்தின் பேராசிரியர் ஏ.எஸ். ஆராவமுதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT