இந்தியா

அடுத்த 5 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் முக்கியமானதாக அமையும்

DIN

"அடுத்த 5 ஆண்டுகள் நமது நாட்டின் வரலாற்றில் முக்கியமானதாக அமையும்; ஏனெனில், இனி வரும் 5 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். காந்திநகரில் உள்ள தனது தாயாரிடம் ஆசி பெற்ற மோடி, ஆமதாபாதில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
உங்கள் அனைவரையும் சந்திக்கவே இங்கு வந்துள்ளேன். சொந்த மாநில மக்களின் ஆசிர்வாதம் என்பது எனக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்தது. 6-ஆவது கட்டத் தேர்தலுக்கு பிறகு பாஜக 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று நான் கூறினேன். அப்போது என்னை சிலர் கேலி செய்தனர். ஆனால், இப்போது பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதா, வேண்டாமா என்று நேற்று இருமனதாகவே இருந்தேன். ஏனெனில், சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் எனது மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற கடமையும், மறுபுறம் அந்த சோக நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கவலையும் என்னை வாட்டியது. தீ விபத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களைத் தேற்ற வார்த்தைகள் ஏதுமில்லை. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த 5 ஆண்டுகள் நமது நாட்டின் வரலாற்றில் மிகமுக்கியமான இடத்தைப் பிடிக்கும். அதாவது 1942 முதல் 1947-இல் நாடு சுதந்திரம் பெற்ற காலம் வரை நாடு எந்த அளவுக்கு முக்கியமான காலகட்டத்தில் இருந்ததோ அதேபோல முக்கியமான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். சர்வதேச அளவில் இந்தியா மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கும். ஒரு காலத்தில் நாம் இழந்த பெருமைகள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளில் முழுமையாக மீட்கப்படும் என்றார் மோடி.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT