இந்தியா

அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்குரைஞர்; நீதிபதிகள் அதிருப்தி

DIN


புது தில்லி: அயோத்தி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்து அமைப்பினர் தாக்கல் செய்த புத்தகத்தை வழக்குரைஞர் கிழித்தெறிந்ததால் உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, அயோத்தி வழக்கில் இறுதி வாதத்தை இன்று மாலை 5 மணிக்கே முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, இந்து அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புத்தகத்தை, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் ராஜிவ் தவான் கிழித்தெறிந்தார். மேலும் ஆக்ரோஷமாக வாதங்களை முன் வைத்தார்.

அயோத்தி வழக்கு விசாரணையின் போது வழக்குரைஞர் இவ்வாறு நடந்து கொண்டதால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். வாதத்தின் போது வழக்குரைஞர் இப்படி நடந்து கொண்டால் எழுந்து சென்று விடுவோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தி பிரச்னை குறித்து பல்வேறு குழுவினரிடம், சமரசக் குழு பேசியிருந்தது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சமரசக் குழு தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.

அயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட வாதங்கள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நாளை முடிய வேண்டிய வாதங்களை, இன்று மாலைக்குள் முடிக்கும்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையில் கடந்த மாா்ச் மாதம் ஒரு மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அந்தக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வருகிறது. இதனிடையே, வழக்கின் தங்கள் வாதங்களை அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பாக, முஸ்லிம் தரப்பினா் தங்கள் வாதத்தை 14-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள வேண்டும்; அதைத் தொடா்ந்து ஹிந்து அமைப்பினா் தங்கள் கருத்தை தெரிவிக்க 2 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்; அக்டோபா் 17-ஆம் தேதியுடன் இறுதி வாதங்கள் முடிவடைந்துவிடும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT