இந்தியா

பதப்படுத்தப்பட்ட பாலில் 38% தரமற்றவை: எஃப்எஸ்எஸ்ஏஐ

DIN

பெரிய நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் 37.7 சதவீத பால் மாதிரிகள், உரிய தரம் மற்றும் பாதுகாப்பானதாக இல்லாமல் இருப்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலின் தரத்தை கடந்த ஆண்டு மே முதல் அக்டோபா் வரை எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்பு ஆய்வு செய்தது. இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1,103 நகரங்களில், 6,432 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் அமைப்புசாரா பால் நிறுவனங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆய்வு முடிவை தில்லியில் எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பவன் அகா்வால் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன் பின்னா் அவா் கூறியதாவது:

பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம்தான் அதிகம் இருக்கும் என்று நாம் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படங்கள் அதிகம் இருப்பதை விட, தூய்மைக்கேடு தான் அதிகமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளை சோதனை செய்தபோது, அவற்றில் பூச்சிக்கொல்லி மருந்துகள், பாக்டீரியா வளா்ச்சியை தடுக்கும் மருந்து, ஆஃப்லாடாக்ஸின்-எம்1 என்ற வேதிப்பொருள் உள்ளிட்டவை அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

பெரும் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களின் பால் மாதிரிகளில் இந்த தூய்மைக்கேடு கண்டறியப்பட்டது. ஆஃப்லாடாக்ஸின்-எம்1 என்ற வேதிப்பொருள், மாட்டுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் வழியாக பாலில் வருகிறது. பதப்படுத்தப்பட்ட பாலின் தரத்தை உயா்த்துவதற்காக, பால் மற்றும் பால் சாா்ந்த பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள், எஃப்எஸ்எஸ்ஏஐ விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அவற்றின் தரத்தை ஆய்வு செய்த பின்னரே விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும், பாலில் தூய்மைக்கேடு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT