இந்தியா

கோவளத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள்

DIN


சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று நாள்கள் அங்கு தங்கியிருக்கும் அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு நடுவே அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் உள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28 தேதிகளில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள வூஹான் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பேசப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
அதன்படி ஷி ஜின்பிங், வரும் அக்டோபர் 11 முதல் 13-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில்,  சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, தலைநகர் தில்லிக்கு வெளியே உள்ள நகரத்தில் சந்தித்துப் பேச பிரதமர் மோடி விரும்புவதாகத் தெரிகிறது. அந்த வகையில், ஷி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையை எந்த இடத்தில் நடத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சென்னையை அடுத்த மாமல்லபுரமும் இடம் பெற்றுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பால் மாமல்லபுரம் அங்கீகரிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க இடத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறும். 11-ஆம் தேதி இரவில் அவர்கள் மாமல்லபுரம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கோவளம் நட்சத்திர விடுதி:
மாமல்லபுரத்துக்கு முன்பாக கோவளத்தில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள மிக பிரம்மாண்டமான இந்த விடுதியில் சீன அதிபரும், பிரதமர் நரேந்திர மோடியும் தங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விடுதிக்குள் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதிகள் இருப்பதால், இருநாட்டுத் தலைவர்களும் அங்கேயே தங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விடுதி, கடற்கரைக்கு மிக அருகே ரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம் தேதியன்று இரவு இருநாட்டுத் தலைவர்களும் ஹெலிகாப்டர் மூலமாக நட்சத்திர விடுதிக்குள்ளே வந்திறங்குவார்கள் எனவும், வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் எனவும் தெரிகிறது.
வேறு இடங்களில் ஹெலிகாப்டர்களை இறக்குவதில் சிக்கல்கள் இருப்பதால் கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியே தங்குவதற்கான இடமாகத் தேர்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் இரு நாட்டுத் தலைவர்களும், அக்டோபர் 13-ஆம் தேதி சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
ஆட்சியர் ஆய்வு: இந்நிலையில், மாமல்லபுரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதி, கடற்கரைக் சாலை, ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT