இந்தியா

கருப்புப் பண மோசடி வழக்கு: டி.கே. சிவகுமார் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

DIN


கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமைக்கு (செப். 21) ஒத்திவைக்கப்பட்டது. 
முன்னதாக அந்த மனு மீது, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் முன்வைத்த வாதம்: 
சிவகுமார் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். ரூ.800 கோடி மதிப்பில் சொத்துகள் வாங்குவதற்கு தனக்கு இருக்கும் வருவாய் ஆதாரம் குறித்து அவர் உரிய பதிலளிக்கவில்லை. அவரது வருவாய்க்கும், அதன் பேரில் அவர் வாங்கியதாகக் கூறும் சொத்து மதிப்புக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. 
அவர் முறைகேடான வகையில் வாங்கிய சொத்துகளுக்கு வரி செலுத்துவதன் மூலம், அதை வருமானத்துக்கு உள்பட்ட சொத்தாக முறைப்படுத்த இயலாது. வரி செலுத்தினாலும் அது முறைகேடாக வாங்கப்பட்ட சொத்துதான். 
தன்னை விவசாயியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சிவகுமார், கடந்த 20 ஆண்டுகளில் அந்தத் தொழிலின் மூலம் ரூ.1.38 கோடி வருவாய் ஈட்டியதாகக் கூறியுள்ளார். 
அந்த வருவாயை முதலீடு செய்து அதன் மூலம் ரூ.800 கோடிக்கு சொத்துகள் வாங்கியதாக அவர் கூறுவது ஏற்புடையதல்ல. சிவகுமாரை தற்போது ஜாமீனில் விடுவித்தால், இந்த வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களை அவர் கலைத்துவிடுவார் என்று கே.எம். நடராஜ் வாதாடினார். 
சிவகுமார் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர், அடுத்த விசாரணையை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். 
காங். பெண் எம்எல்ஏவிடம் விசாரணை: சிவகுமாருக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் பெண் எம்எல்ஏ லக்ஷ்மி ஹெப்பல்கரிடமும் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT