இந்தியா

நீதிபதிகள் நேர்மைப் பண்பை கொண்டிருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து

DIN

பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்காக நீதிபதிகள் அளப்பரிய நேர்மை குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில்  ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றியவர், தனக்கு நெருக்கமான பெண் வழக்குரைஞருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 1985-இல் நியமிக்கப்பட்டவரான அவர் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து 2001-இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், இந்த விவகாரத்தில் குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து அவர் மாஜிஸ்திரேட் பணியில் இருந்து கடந்த 2004-இல் நீக்கப்பட்டார்.
அந்த நடவடிக்கையை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும், அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  
அவரது மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், அவருக்கு எந்தவொரு சலுகையும் காட்ட மறுத்த நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில், ஒரு பெண் வழக்குரைஞருடன் தனக்கு இருந்த நெருக்கத்தின் அடிப்படையில் இந்த மாஜிஸ்திரேட் தீர்ப்புகளை அளித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் அவர் தீர்ப்பளிக்கவில்லை. இதுவும் மனநிறைவு சார்ந்த விஷயம்தான். மனநிறைவில் பல்வேறு வகைகள் உள்ளன. பணத்தால் ஏற்படும் மனநிறைவு, அதிகாரத்தால் ஏற்படும் மனநிறைவு, காமத்தால் ஏற்படும் மனநிறைவு போன்றதாக அவை இருக்கக் கூடும்.
நீதிபதியின் முதல் மற்றும் மிக அவசியமான பண்பே நேர்மைதான். ஒரு நீதிபதியின் பொது வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் அளப்பரிய நேர்மை பிரதிபலிக்க வேண்டும். தாங்கள் மிக உயர்ந்த பதவியை வகிக்கிறோம் என்பதையும் பொதுமக்களுக்கு சேவையாற்றுகிறோம் என்பதையும் நீதிபதிகள் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். மற்ற அமைப்புகளை விட நீதித்துறையில் நேர்மையின் அவசியம் மிகவும் அதிகமாக உள்ளது. நீதித்துறை என்பது நேர்மையையும், நாணயத்தையும் அடிப்படையாகக் கொண்ட அமைப்பாகும். 
நீதிபதி தனது தீர்ப்புகளின் தரத்தால் மட்டுமின்றி தனது நடத்தையின் தரத்தாலும் தூய்மையாலும் மதிப்பிடப்படுகிறார். ஆனால் இந்த மனுதாரர் ஒரு நீதிபதியிடம் எதிர்பார்க்கப்படும் நேர்மையையும், நடத்தையையும் கொண்டிருக்கவில்லை. அவருக்கு எந்தக் கருணையும் காட்ட இயலாது. எனவே அவரது மேல்முறையீட்டு மனுவில் சாரம் இல்லை என்பதால் அதைத் தள்ளுபடி செய்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT