இந்தியா

திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்: தரிசனம் 5 மணி நேரம் ரத்து

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது.

திருமலையில் ஆண்டுக்கு 4 முறை ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதில், வைகுண்ட ஏகாதசி, உகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் செப். 30-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட்டது. 

அதற்காக ஏழுமலையான் கருவறைக்குள் இருந்த உற்சவ மூர்த்திகள், பூஜைப் பொருள்கள் உள்ளிட்டவை வெளியில் கொண்டு செல்லப்பட்டன. பின்னர், ஏழுமலையான் சிலை மீது கூடாரம் என்னும் வெள்ளைத் துணியை அர்ச்சகர்கள் போர்த்தினர். பின்னர், தரிசன வரிசைகள், உயர்மேடைகள், திரைச்சீலைகள், விளக்குகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதையடுத்து, சுகந்த பரிமள திரவியத்தைக் கொண்டு(கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனம், புனுகு, ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பொருள்கள்) கருவறை சுவர், தூண்கள், மண்டபங்கள், கோபுரங்கள், சந்நிதிகள், வாயில்கள் உள்ளிட்டவை தூய்மைப்படுத்தப்பட்டன. 

பின்னர், பூஜைப் பொருள்கள், விளக்குகள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதையடுத்து, ஏழுமலையான் மீது போர்த்தியிருந்த கூடாரம் நீக்கப்பட்டு, கருவறைக்குள் உற்சவ மூர்த்திகளின் சிலைகள், பூஜைப் பொருள்கள், விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து, ஏழுமலையானுக்கு புது வஸ்திரம் சாத்தப்பட்டு, நித்திய பூஜைகள் செய்து, அர்ச்சகர்கள் நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர்.  

பின்னர், புதிய திரைச்சீலைகள் அணிவிக்கப்பட்டன. இதை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் ஏழுமலையானுக்கு நடைபெற்ற சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT