இந்தியா

தெலங்கானாவில் மே 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: அமைச்சரவை முடிவு

DIN


தெலங்கானாவில் மே 7-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்குமாறு அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தெலங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும், மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு பின்னர் அறிவித்தது.

இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மே 7-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். மேலும் அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு மேற்கொண்டதன் விளைவாக கட்டுப்பாடுகளுக்கு எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சில துறைகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்காக மத்திய அரசு வழிமுறைகளை வழங்கியிருந்தாலும், இதற்கான முடிவை மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சந்திரசேகர ராவ், தளர்வுகள் இல்லாத ஊரடங்குக்கு 95 சதவீத மக்கள் ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி தெலங்கானாவில் இன்று புதிதாக 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன்மூலம் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 858 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT