இந்தியா

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு: வருமான வரம்பை உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை

DIN

புது தில்லி: இதர பிற்படுத்தப்பட்டோரில் மேல்நிலையினருக்கு (ஓபிசி கிரீமி லேயர்) இடஒதுக்கீடு வழங்க, அவர்களது வருமான வரம்பை ரூ. 8 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இப்பிரிவில் வசதியானவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்து உருவானதன் அடிப்படையில் 1971-இல் சதானந்தன் ஆணையம் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. 

அப்போது பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளவர்களை மேல்நிலையினராக (கிரீமி லேயர்) வகைப்படுத்தி, அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியதில்லை என்று ஆணையம் பரிந்துரைத்தது. 

அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றமும் 1993-இல் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வருமானம் உள்ள இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகைகள் நிறுத்தப்பட்டன. இந்த வருமான வரம்பு 2013-இல் ரூ. 6 லட்சமாகவும், 2017-இல் ரூ. 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய, பாஜக எம்.பி. கணேஷ் சிங் தலைமையில்  நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. 

"இதர பிற்பட்ட வகுப்பினரில் மேல்நிலையினரை (ஓபிசி கிரீமிலேயர்) தீர்மானிக்கும் அம்சங்களைப் புதுப்பித்தல்' தொடர்பான இக்குழு அரசுக்கு தனது பரிந்துரையை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓபிசி கிரீமிலேயர் பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ. 8 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும். 

இந்த வருமானத்தைக் கணக்கிடும்போது விவசாய வருமானத்தையும் மாத சம்பளத்தையும் கணக்கில் கொள்ளக் கூடாது என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.

குழு உறுப்பினரும் பாஜக எம்.பி.யுமான விஷாம்பர் பிரசாத் நிஷாத் இதுதொடர்பாகக் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளில், அரசுப் பணிகள், கல்விநிலையச் சேர்க்கைகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகைகளை ஓபிசி பிரிவினர் பெறுவது ,தற்போதைய வருமான உச்ச வரம்பு காரணமாக படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. 
இதனைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும், ஓபிசி கிரீமிலேயருக்கான வருமான உச்ச வரம்பை ரூ. 15 லட்சமாக உயர்த்துமாறு வலியுறுத்தினர் என்றார்.

இடஒதுக்கீட்டு முறையை சமூகரீதியாக மட்டுமே கணக்கிட வேண்டும்; அதில் பொருளாதார அளவுகோல்களை நுழைக்கக் கூடாது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்ததாகத் தெரிகிறது. மேலும் பல பரிந்துரைகள் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைப்படி , ஓபிசி கிரீமி லேயருக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT