இந்தியா

தப்லீக் மாநாடு தொடர்பான ஊடக செய்திகள்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

DIN


புதுதில்லி: கரோனா நோய்த் தொற்றுப் பரவலுடன் தப்லீக் ஜமாத் மாநாட்டை தொடர்புபடுத்தி ஊடகங்களில் செய்தி வெளியிடுவதற்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்துக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தொலைக்காட்சிகளில் இதுபோன்ற செய்திகளைக் கண்காணிப்பதற்கு ஓர் ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தில்லியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் பலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், "இதுபோன்று பொய்ச் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்தவும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி ஜாமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணையின்போது அந்தப் பதில் மனுவில் திருப்தியடையாத உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது பிரமாணப் பத்திரத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்கள் இல்லை என தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். 

அவர் கூறியது: மத்திய அரசு அளித்துள்ள பதிலில் எங்களுக்கு திருப்தியில்லை. கேபிள் டிவி நெட்வொர்க்கின் செய்திகளைக் கட்டுப்படுத்த கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் அதுகுறித்த தகவல்கள் இல்லை. தொலைக்காட்சிகளில் இதுபோன்ற செய்திகளைக் கையாள்வதற்கான வழிமுறை என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அவ்வாறு ஒழுங்குமுறை ஏற்பாடு, அமைப்பு இல்லாவிட்டால், ஒன்றை உருவாக்கி மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். 

செய்தி ஒளிபரப்பாளர்கள் தர ஆணையம் போன்ற அமைப்புகளிடம் இந்த ஒழுங்குமுறை கண்காணிப்பை விட்டுவிட முடியாது எனக் கூறிய நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT