இந்தியா

இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது புதிய கல்விக் கொள்கை: வெங்கய்ய நாயுடு பேச்சு

DIN

ஹைதராபாத்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 13-ஆவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் காணொலிக் காட்சி வழியில் உரையாற்றினார் வெங்கய்ய நாயுடு. அவரது உரை விவரம்:
நமது நாட்டின் பண்டைய கல்வி முறையானது, நல்ல ஆளுமைகளை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தியது. அத்துடன், இயற்கையோடு இணைந்து வாழவும், அனைவரையும் மதிக்கவும் மக்களுக்கு கற்றுக் கொடுத்தது. நடைமுறை சார்ந்ததாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் நமது கல்வி முறை இருந்தது. கல்வி என்பது, தொடர்ச்சியான கற்றல் செயல்முறையாகக் காணப்பட்டது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையும் அதேபோன்ற அம்சங்களைக் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. இது இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. மேலும், நமது கல்வி முறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வர முயல்கிறது.
அறிவு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளின் வளம் மிக்க மையமாக இந்தியாவை மாற்றும் வகையில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பணியாற்ற வேண்டும். பல்வேறு துறைகளில் அதிநவீன ஆராய்ச்சிகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான மையங்களாக தங்களது நிறுவனங்களை அவர்கள் உருவாக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கற்பித்தல் முறைகளை முழுமையாக மாற்றியமைப்பதற்கும், 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களை புதிய கற்பித்தல் திறன்களுடன் தயார்படுத்துவதற்கும் இதுவே உரிய நேரம்.
இளைஞர்கள் பெரிய அளவில் கனவு காண வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் கூறியதுபோல மாணவர்கள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதை அடைய கடுமையாகப் பாடுபட வேண்டும்.
நமது நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களின் ஆற்றலை நாம்  முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடையே தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான சரியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT