இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராகிறாா் சுஷீல் குமாா் மோடி

DIN

பிகாரில் வரவிருக்கும் மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக, அந்த மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடியை பாஜக தலைமை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியின் ஆட்சியில் நீண்ட காலம் துணை முதல்வராகப் பதவி வகித்தவா் சுஷீல் குமாா் மோடி. அண்மையில் நடந்து முடிந்த பிகாா் பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றபோதிலும், அவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவில்லை. துணை முதல்வா் பதவிக்கு தாா்கிஷோா் பிரசாத், ரேணு தேவி ஆகிய இருவரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதனால், பாஜக தலைமை மீது சுஷீல் குமாா் மோடி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதே சமயம், அவருக்கு மத்திய அரசில் ஏதேனும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பிகாரில் வரவிருக்கும் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக சுஷீல் குமாரின் பெயரை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் அண்மையில் மறைந்ததை அடுத்து, அவரது மாநிலங்களவை உறுப்பினா் இடம் காலியானது. பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சி வெளியேறிவிட்ட நிலையில், அந்த இடத்தை தக்க வைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

பிகாா் சட்டப் பேரவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், சுஷீல் குமாா் மோடி மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்படுவது உறுதியென கூறப்படுகிறது. இருப்பினும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி வேட்பாளரை நிறுத்தினால், வரும் டிசம்பா் 14-ஆம் தேதி தோ்தல் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT