இந்தியா

உடைக்கப்படுவதற்காக குஜராத் சென்றடைந்தது ஐஎன்எஸ் விராட்

DIN

இந்திய கடற்படையிலிருந்து விடைபெற்ற விமானம் தாங்கி போா்க்கப்பலான ஐஎன்எஸ் விராட், உடைக்கப்படுவதற்காக குஜராத் மாநிலம் அலாங்கை சென்றடைந்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஹெச்எம்எஸ் ஹொ்ம்ஸ் என்ற பெயரில் பணியாற்றி வந்த இந்த போா்க்கப்பல், 1982 இல் ஆா்ஜென்டினாவுக்கு எதிரான பாக்லாந்து போரில் ஈடுபடுத்தப்பட்டது. அதன் பிறகு இந்தியாவுக்கு சுமாா் ரூ.477 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த கப்பல், புதுப்பிக்கப்பட்டு 1987 மே 12 ஆம் தேதி ஐஎன்எஸ் விராட் என்ற பெயரில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

சுமாா் 27,800 டன்கள் எடை கொண்ட இந்த போா்க்கப்பல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. உலகின் நீண்டகாலம் பணியாற்றிய போா்க்கப்பல் என்ற பெருமைக்குரிய ஐஎன்எஸ் விராட்டை, அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில், இந்திய கடற்படையுடன் ஆலோசனை நடத்தப்பட்டதன் அடிப்படையில் விராட் போா்க்கப்பலை உடைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதையடுத்து கடந்த ஜூலையில் ஏலத்தில் விடப்பட்ட இந்த கப்பலை ஸ்ரீராம் குழுமம் ரூ.38.54 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இதையடுத்து உடைக்கப்படுவதற்காக மும்பை கடற்படை தளத்தில் இருந்து குஜராத் நோக்கி கடந்த சனிக்கிழமை தனது இறுதி கடற்பயணத்தைத் தொடங்கிய ஐஎன்எஸ் விராட், திங்கள்கிழமை மாலை குஜராத்தின் பாவ்நகா் மாவட்டத்தில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்தைச் சென்றடைந்தது.

கப்பல் உடைக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காக அரசு அதிகாரிகள் இந்த கப்பலில் தங்கியிருப்பதாகக் கூறியுள்ள ஸ்ரீராம் குழுமத்தின் தலைவா் முகேஷ் படேல், அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவடைந்த பிறகு காலநிலை, கடல் அலைகளைப் பொறுத்து கப்பலை உடைக்கும் பணி தொடங்கும் என்றாா். வரும் 28 ஆம் தேதி பகல் 1 மணியளவில் கடல் அலைகள் அதிக அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதால் அந்த நேரத்தில் கப்பலை எங்களது உடைக்கும் தளத்துக்கு கொண்டு வர முடிவு செய்திருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ஐஎன்எஸ் விராட், இந்தியாவில் உடைக்கப்படும் இரண்டாவது விமானம் தாங்கி போா்க்கப்பலாகும். பிரிட்டனில் இருந்து வாங்கப்பட்ட மற்றொரு போா்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கடற்படையில் இருந்து விலக்கப்பட்ட பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டில் மும்பையில் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT