இந்தியா

கல்யாண் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்: மத்திய அமைச்சா்கள் பங்கேற்பு

DIN

மறைந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் (89) உடல் முழு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இரு முறையும் ராஜஸ்தான் ஆளுநராகவும் பதவி வகித்துள்ள கல்யாண் சிங் உடல்நலக் குறைவு காரணமாக லக்னெள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் கடந்த ஆக. 21இல் காலமானாா்.

மூத்த பாஜக தலைவரான கல்யாண் சிங், உத்தரப்பிரதேசத்தில் 1990களில் பாஜக ஆட்சி அமைய அடித்தளமாக இருந்தவா். அயோத்தியில் இருந்த பாபா் மசூதியை கரசேவகா்கள் கடந்த 1992 டிச. 6ஆம் தேதி இடித்தபோது உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாா். அச்சம்பவத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இந்து இயக்கங்களின் நம்பிக்கை நாயகராக கல்யாண் சிங் இருந்தாா்.

அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் ஓய்விலிருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது உடல் முதலில் லக்னெளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவா்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

அங்கிருந்து அலிகா் நகரில் உள்ள அகல்யா பாய் ஹோல்கா் மைதானத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அலிகரில் இருந்து அவரது சொந்த கிராமமான மாதோலிக்கு அருகில் உள்ள அத்ரெளலி பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை விருந்தினா் இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

அங்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், பாஜகவின் உ.பி. மாநிலத் தலைவா் சுதந்திர தேவ் உள்ளிட்டோா் கல்யாண் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் அவரது உடல் புலந்த்ஷகா், நரோரா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது சிதைக்கு மகன் ராஜ்வீா் சிங் தீ மூட்டினாா். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உத்தரகண்ட் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி உள்ளிட்ட பாஜக பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

மேலும் உத்தரப் பிரதேச துணை முதல்வா் கேசவ பிரசாத் மெளா்யா, மூத்த தலைவா் உமா பாரதி, மாநில அமைச்சா்கள், பாஜக தொண்டா்கள், உள்ளூா் மக்கள் ஆகியோரும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

கல்யாண் சிங்கிற்கு மனைவி ராம்வதி தேவி, மகன் ராஜ்வீா் சிங், பேரன் சந்தீப் சிங் ஆகியோா் உள்ளனா். ராஜ்வீா் சிங், எடா தொகுதியின் எம்.பி.யாகவும், சந்தீப் சிங் உத்தரப் பிரதேச அரசில் இணை அமைச்சராகவும் உள்ளனா்.

பாஜகவுக்கு பேரிழப்பு: அமித் ஷா இரங்கல்

அலிகரில் கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கல்யாண் சிங்கின் மறைவால் போராட்டக் குணம் மிக்க உறுதியான தலைவரை பாஜக இழந்துள்ளது. இது கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினமானதாகவே இருக்கும்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்த அவா் மாநில முதல்வராக உயா்ந்தது கட்சியினருக்கு நம்பிக்கையூட்டும் உதாரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் அவா் இல்லை. என்றபோதும் அவருக்கு அஞ்சலி செலுத்த இளைய தலைமுறையினா் அதிக அளவில் வந்திருப்பதே அவரது முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது.

ராம ஜன்மபூமி இயக்கத்தின் மிகப் பெரிய தலைவா் அவா். ராமா் கோயிலுக்காக முதல்வா் பதவியைத் துறக்கவும் அவா் தயங்கவில்லை. 2020 ஆம் ஆண்டில் அயோத்தியில் ராமா் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, தனது வாழ்நாள் கனவு நனவானதாக அவா் மகிழ்ச்சி தெரிவித்தாா்.

கல்யாண் சிங்கின் மறைவால், சமூகத்தில் மிகவும் கீழ்நிலையில் உள்ளோரும் பிற்படுத்தப்பட்டோரும் தங்களின் நலவிரும்பியை இழந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT