பெகாஸஸ் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தாங்கள் உளவுபார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர் குற்றச்சாட்டை சுமத்திவருகிறார்கள். இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒட்டுக்கேட்பதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுவது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர் எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தன்னுடைய குழந்தைகளின் சமூகவலைதள பக்கங்களை மத்திய அரசு கண்காணிப்பதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "என்னுடைய குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? என குற்றம்சாட்டியிருந்தார்.
எதிர்க்கட்சி தலைவர்களின் தொடர் குற்றசாட்டு மத்திய அரசுக்கு அழுத்தமாக மாறியுள்ளது. இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சகத்தின் மூத்த அலுவலர், தன்னுடைய குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியிருப்பது குறித்து அமைச்சகத்திற்கு தெரிய வந்துள்ளது" என்றார்.
இதுகுறித்து சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது குறித்து பிரியங்கா காந்தி முறைப்படி புகார் அளிக்கவில்லை என்றாலும், இதுகுறித்து தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | இரண்டு மாதங்களுக்கு பின்னர் உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மிரயா வதேரா (18), ரைஹான் வதேரா (20) என பிரியங்கா காந்திக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், இருவரும் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். கடந்த தேர்தல்களில், படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியை இந்த முறை பிரியங்கா காந்தி மீட்டெடுப்பாரா என அரசியல் வல்லுநர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.