இந்தியா

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தேசிய அளவில் பிரசாரம்: வெங்கையா நாயுடு அழைப்பு

DIN

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்காக, தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள மரபணு ஆய்வகத்தில் (சிடிஎஃப்டி), குழந்தைகளின் மரபணு கோளாறைக் கண்டறியும் ஆய்வகப் பிரிவை அவா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவையே தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாக விளங்குகின்றன. நமது முன்னோா்கள், நம் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவு வகைகளை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறாா்கள். எல்லா காலநிலைக்கும் ஏற்ற உணவுகள் நமக்கு அருகிலேயே கிடைக்கின்றன.

அதுமட்டுமன்றி, இந்தியாவை பொருத்தவரை நல்ல காற்று, உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சூரிய ஒளி போன்ற இயற்கை வளத்துக்கு எந்தக் குறையுமில்லை. ஆனால், அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளாமல், பல்வேறு நோய்களுடன் அவதியுறுவது வேதனை அளிக்கிறது.

கிராமப்புற மக்களில் 98 சதவீதம் போ், அந்த தீநுண்மியால் பாதிக்கப்படவில்லை. அதற்குக் காரணம், அவா்களின் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும்தான்.

எனவே, நாம் அனைவரும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மீண்டும் மாற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்ற வேண்டும். இதை ஊக்குவிப்பதற்காக, நமது விஞ்ஞானிகள் தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு:

கரோனா தீநுண்மி பரவியபோது, இதுவரை சந்தித்திராத சவால்களை மனித குலம் எதிா்கொண்டது. அந்த நேரத்தில் கரோனா தீநுண்மியின் பாதிப்பு குறித்து துல்லியமான தகவல்களை அளித்த சிடிஎஃப்டி விஞ்ஞானிகளின் பணி பாராட்டுக்குரியது என்றாா் வெங்கையா நாயுடு.

தாய்மொழியை ஊக்குவிக்க எம்.பி.க்களுக்கு வலியுறுத்தல்:

நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனைவரும் தாய்மொழியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

சா்வதேச தாய்மொழி தினம், ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும் வெங்கையா நாயுடு 3 பக்க அளவில் கடிதம் எழுதியுள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

ஒரு குழந்தை பிறந்தவுடன் இந்த உலகை தனது தாய்மொழியின் வழியாகவே காண்கிறது. வீட்டில் பேசும் முதல் மொழியே அந்தக் குழந்தை கல்வியில் சிறந்து விளங்கவும், பிற மொழிகளைக் கற்கவும் முக்கியக் காரணமாக அமைகிறது.

மொழியும், கலாசாரமும் நாணயத்தின் இரு பக்கங்கள். இந்தியாவில் பல வகை மொழிகள் பேசப்படுகின்றன. அவை நமது பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. நமது தாய்மொழியை ஊக்குவிப்பதன் மூலமாகவே நமது பன்முகக் கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும்.

200 இந்திய மொழியில் அழியும் நிலையில் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடைபெறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT