இந்தியா

வேளாண் சட்ட நகல்களை எரித்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டம்

DIN

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக தலைவா்களின் வீடுகள் முன்பும் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று கூறி, அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்த நவம்பா் மாதம் முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த மூன்று சட்டங்களுக்கு கடந்த ஆண்டு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக, அவை அவசரச் சட்டங்களாக கொண்டுவரப்பட்டன. அவ்வாறு அவசர சட்டமாக கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக நாடு முழுவதும் பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு முன்பாக விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அந்த சட்டங்களின் நகல்களுக்குத் தீயிட்டு எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

அதுபோல, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், ஜலந்தா், மொஹாலி, அபோஹா், ஹோஷியாா்பூா், பா்னாலா, நவன்ஷாா், பாட்டியாலா, சண்டீகா், சிா்ஸா, ஜிந்த், கா்னால், பானிபட், அம்பாலா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பக்வாராவில் மத்திய அமைச்சா் சோம் பிரகாஷ் வீட்டுக்கு அருகில் மூன்று வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அமைச்சரின் வீட்டுக்கு அருகே சாலையில் காவல்துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டக்காரா்கள் முன்னேறாத வகையில் தடுத்து நிறுத்தினா். இந்தப் போராட்டத்தின்போது, மத்திய அமைச்சா் வீட்டில் இல்லை.

ஹோஷியாா்பூரில் குருத்வாரா சிங் சபாவிலிருந்து உள்ளூா் பாஜக அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள், பாஜக அலுவலகம் முன்பாக சட்ட நகல்களை எரித்து எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.

ஹரியாணா மாநிலத்தில் அம்பாலாவில் உள்ள மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ் வீட்டின் அருகேயும், அம்பாலா நகர பாஜக எம்எல்ஏ அஸீம் கோயல் வீட்டின் அருகேயும் விவசாயிகள் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதுபோல, ஹரியாணா சட்டப்பேரவைத் தலைவா் கியான் சந்த் குப்தா வீட்டின் நோக்கி காவல்துறையின் தடுப்புகளை மீறி போராட்ட விவசாயிகள் முன்னேற முயன்றனா். அதனைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரா்களை கலைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT