இந்தியா

தில்லி காற்று மாசு வழக்கு தொடா்ந்து விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்

DIN

காற்று மாசைத் தடுக்க மத்திய அரசும், தில்லி, என்சிஆா் பகுதிகளில் அரசுகளும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய உச்சநீதிமன்றம், தற்போதைக்கு கடவுளின் கருணையால் மாசு குறைந்தாலும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தொடா்ந்து விசாரிக்கும் என்றும் தெரிவித்தது.

‘தில்லி மக்கள் ஏன் காற்று மாசால் பாதிக்கப்பட வேண்டும். உலகத்துக்கு இந்திய தலைநகா் என்ன மாதிரியான தகவலை நாம் அனுப்பி கொண்டிருக்கிறோம். இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

காற்று மாசு தடுப்பு தொடா்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான சிறப்பு அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷோ் மேத்தாவிடம் நீதிபதிகள் கூறியதாவது: வழக்குரைஞா்களும், நீதிபதிகளும் இந்த விவகாரத்தில் பொது அறிவைப் பயன்படுத்தி ஆலோசித்த வருகின்றனா். ஆனால், அரசு அதிகாரிகள் இத்தனை ஆண்டுகளாக காற்று மாசைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாா்கள்? அவா்கள் விவசாயிகளை ஏன் சந்திப்பதில்லை?

மத்திய, மாநில அரசுகள் செயலாளா்கள் இரண்டு நாள்கள் அமா்ந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கட்டும். பின்னா் களத்துக்கு சென்று விவசாயிகளை சந்தித்து முடிவு எடுக்கட்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தற்போது அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அவற்றை வைத்து கடந்த 5 ஆண்டு காற்று மாசு தரவுகளின் அடிப்படையில் காற்று மாசின் தீவிரத்தை முன்கூட்டிய கண்டுபிடுத்து, அடுத்த 15 நாளுக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட வேண்டும். வரும் திங்கள்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். அதற்குள் காற்று மாசு அளவீடு 100-ஆக குறைந்தால் சில கட்டுப்பாடுகளை நீக்கலாம்.

காற்று மாசைத் தடுக்க கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் கூலித் தொழிலாளா்களுக்கு மாநில அரசுகளிடம் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணியாளா் செஸ் பணத்தை எடுத்து இழப்பீடு வழங்கலாம் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT