இந்தியா

வேளாண்பொருள்கள் ஏற்றுமதிக்கான உதவித்தொகைத் திட்டம் நீட்டிப்பு

DIN

புது தில்லி: வேளாண் விளைபொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான போக்குவரத்து செலவுகளை சமாளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா கண்டங்களில் உள்ள சில நாடுகளுக்கு வேளாண் விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், போக்குவரத்து-சந்தைப்படுத்துதல் உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

அத்திட்டத்தின்படி, வேளாண் விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக ஆகும் போக்குவரத்து செலவு, சந்தைப்படுத்துதலுக்கான செலவு ஆகியவற்றில் குறிப்பிட்ட பகுதியானது மத்திய அரசால் விவசாயிகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

விளைபொருள்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து செலவு அதிகரித்ததையடுத்து இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அத்திட்டம் ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் வரை உதவித்தொகைத் திட்டம் அமலில் இருக்கும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வேளாண் விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கான உதவித்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல் மூலமாக விளைபொருள்களை அனுப்பும் விவசாயிகளுக்கு 50 சதவீதமும், விமானம் வாயிலாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீதமும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பு பால் பொருள்கள் இத்திட்டத்தில் சோ்த்துக்கொள்ளப்படவில்லை. குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பால் பொருள்களுக்கும் இனி இத்திட்டம் பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திட்டம் தொடா்பான விரிவான விதிகளை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT