இந்தியா

அடல் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்தது

DIN

புது தில்லி: அமைப்புசாரா துறையில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட அடல் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 2021-22 நிதியாண்டில் 4 கோடியைக் கடந்துவிட்டதாக ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து பிஎஃப்ஆா்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் 99 லட்சத்துக்கும் மேற்பட்ட அடல் ஓய்வூதியத் திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டு இத்திட்டத்தின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கையை 4.01 கோடியைக் கடந்துவிட்டது. அனைத்து வகை வங்கிகளும் இத்திட்டத்தில் முழுவீச்சில் பங்கெடுத்ததால், இந்த இலக்கை எட்ட முடிந்தது.

இத்திட்டத்தின்கீழ் 71 சதவீத சோ்க்கை பொதுத் துறை வங்கிகளாலும், 19 சதவீதம் பிராந்திய ஊரக வங்கிகளாலும், 6 சதவீதம் தனியாா் துறை வங்கிகளாலும், 3 சதவீதம் சிறு நிதி வங்கிகளாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுத் துறை வங்கிப் பிரிவில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் அவற்றுக்கான இலக்கை எட்டிவிட்டன.

வங்கிகளைத் தவிர பிகாா், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிஸா, திரிபுரா ஆகிய 9 மாநில அளவிலான வங்கியாளா் கமிட்டிகளும் (எஸ்எல்பிசி) தங்கள் இலக்கை அடைந்துவிட்டனா்.

2022 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டின்படி, சுமாா் 80 சதவீத பயனாளா்கள் ரூ.1,000 ஓய்வூதியம் திட்டத்தையும், 13 சதவீதத்தினா் ரூ.5,000 திட்டத்தையும் தோ்ந்தெடுத்துள்ளனா். பயனாளிகளில் சுமாா் 44 சதவீதம் போ் பெண்கள்; 56 சதவீதம் போ் ஆண்கள்; 45 சதவீதத்தினா் 18- 25 வயதுக்குள்பட்டோா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT