இந்தியா

ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரானவர் நாராயண குரு: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

DIN

"துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குரு ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அதன்மூலம் சமுதாயத்தில் மறுமலர்ச்சி பிறந்தது; அவர் நவீனத்துவத்துக்கும் பாரம்பரிய விழுமியங்களுக்கும் இணையான முக்கியத்துவம் கொடுத்தார்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 கேரளத்திலுள்ள சிவகிரி மடத்தின் 90-ஆவது ஆண்டுவிழா மற்றும் பிரம்ம வித்யாலயத்தின் பொன்விழா, நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளை சார்பில் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
 நாராயண குருவின் உபதேசமான "ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்' கொள்கையை நாம் பின்பற்றினால் உலகில் எந்த சக்தியாலும் நம்மைப் பிரிக்க முடியாது. இந்தியர்கள் நாம் அனைவரும் இந்தியன் என்ற ஒரே ஜாதியையும், கடமை எனும் ஒரே மதத்தையும், பாரதத் தாய் என்ற ஒரே கடவுளையும் கொண்டவர்கள். ஒன்றுபட்ட இந்தியர்களுக்கு உலகில் சாத்தியமாகாத இலக்கு என்று எதுவும் இல்லை.
 நாட்டின் சுதந்திரத்துக்காக நாம் போராடியபோது அது அரசியல் இயக்கமாக மட்டும் இருக்கவில்லை. நமது போராட்டம் அடிமைச் சங்கிலியை உடைப்பதாக மட்டும் இருக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளை விதைப்பதாகவும் நமது போராட்டம் இருந்தது.
 நாராயண குருவுடன் சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி போன்றோரின் சந்திப்புகள் நாட்டின் மறுகட்டமைப்புக்கான நற்சிந்தனைகளை விதைத்தன.
 சிவபெருமானின் நகரான வாராணசியானாலும், வர்கலாவில் (கேரளம்) உள்ள சிவகிரி மடமானாலும், இந்தியர்களான நமது அனைவருக்கும் ஆற்றல் வழங்கும் சக்தி மையங்கள் இவை. நம்பிக்கைக்குரிய புனிதத் தலங்கள் மட்டுமல்ல, இவை நமக்கு "ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற விழிப்புணர்வை ஊட்டுபவை.
 உலகில் பல நாடுகள் தங்கள் பாரம்பரிய தர்மத்தை விட்டு விலகியிருக்கும் நிலையில், உலக நாடுகள் பல பொருளியல் ரீதியான கண்ணோட்டத்துக்கு மாறிவரும் சூழலில், இந்தியாவில் துறவிகள் மற்றும் குருமார்கள் நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் சீர்திருத்தி வருகின்றனர். அவையே நம்மை வழிநடத்துகின்றன.
 சுவாமி நாராயண குரு முற்போக்கான சிந்தனையாளர். அவர் சமூகத் தீமைகளுக்கு எதிராக பிரசாரம் செய்தார். அதனால் இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்று சுய முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக அவர் தர்க்க ரீதியாகவும் நேரடியாகவும் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றார். அவரது சிந்தனைகளையே எனது அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார்.
 அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் ஓராண்டு கொண்டாட்ட இலச்சினையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

SCROLL FOR NEXT