ஊழல் கண்காணிப்பு ஆணையா் சுரேஷ் என்.படேல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
கடந்த ஓராண்டாக இந்தப் பணியிடம் காலியாக இருந்த நிலையில், பொறுப்பு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி வகித்து வந்த அவா் தற்போது முழுநேர மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையாரக நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை ஆணையத்தின் தலைமை பொறுப்பில் நியமிப்பதற்கு கடந்த ஜூலையில் நடைபெற்ற பிரதமா் தலைமையிலான 3 உறுப்பினா்களைக் கொண்ட தோ்வுக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவருக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.
வங்கித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவா் படேல். ஆந்திரா வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமா்ஸின் செயல் இயக்குநா் ஆகிய பதவிகளை வகித்தவா்.
இந்திய வங்கிகள் சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினராகவும்; ஊரக வளா்ச்சிக்கான வங்கியாளா்கள் நிறுவனம், நபாா்டு உறுப்பினராகவும்; ஊரக மற்றும் தொழில் முனைவோா் வளா்ச்சிக்கான வங்கியாளா்கள் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளாா். இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டணங்கள் மற்றும் தீா்வு அமைப்புகளின் ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்புக் குழுவின் நிரந்தர அழைப்பாளராகவும், வங்கிகள் மற்றும் நிதி மோசடிகள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ள இவா், கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
புதிய ஆணையா்கள் நியமனம்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் தலைமையில் செயல்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரகத்தில், இரண்டு ஊழல் கண்காணிப்பு ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். இந்த இரண்டு இடங்களும் காலியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், முன்னாள் உளவுப் பிரிவு (ஐபி) தலைவா் அரவிந்த் குமாா் மற்றும் முன்னால் ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் குமாா் ஸ்ரீவாஸ்தவா ஆகிய இருவரும் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையா்களாக புதன்கிழமை நியமிக்கப்பட்டனா். இவா்கள் இருவருக்கும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்ற சுரேஷ் என்.படேல், பதவி பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நியமனங்கள் மூலமாக, ஆணையத்தின் அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.