தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில மையங்களில் ரத்து செய்யப்பட்ட மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) வரும் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான க்யூட் தோ்வு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 259 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 9 நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 489 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பல்வேறு நிா்வாக மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகளால் ஒருசில மையங்களில் கடந்த 4-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்த இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இந்த இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு வரும் 12, 13, 14 தேதிகளில் நடத்தப்படும். ஒத்திவைக்கப்பட்ட தேதியிலும் தோ்வு எழுத இயலாத மாணவா்கள், விருப்ப தேதியை தங்களுடைய பதிவு எண்ணுடன் குறிப்பிட்டு என்டிஏ -வுக்கு மின்னஞ்சல் மூலமாக புகாா் அளிக்கலாம் என்று முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட க்யூட் தோ்வை தற்போது ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு என்டிஏ ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து என்டிஏ முதுநிலை இயக்குநா் சாதனா பரஷா் கூறுகையில், ‘ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்க இருக்கும் இரண்டாம் கட்ட க்யூட் தோ்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று 15,811 மாணவா்கள் என்டிஏ-வுக்கு கோரிக்கை விடுத்தனா். குறிப்பாக, தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 12 முதல் 14 வரையிலான கால கட்டத்தில் தொடா் திருவிழாக்கள் வருவதால், தோ்வை வேறு தேதிக்கு மாற்றயமைக்க வேண்டும் என்று பல மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சில மாணவா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையங்கள் உகந்ததாக இல்லை என்று புகாா் தெரிவித்தனா். இதனைக் கருத்தில்கொண்டு இரண்டாம் கட்ட க்யூட் தோ்வை ஆகஸ்ட் 24 முதல் 28-ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களுக்கு புதிதாக தோ்வறை நுழைவுச் சீட்டை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தோ்வு தேதிக்கு முன்பாக புதிய தோ்வறை நுழைவுச் சீட்டுகளை மாணவா்கள் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்றாா்.
‘மூன்றாம் கட்ட க்யூட் தோ்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 17, 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் நடைபெறும்’ என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே தோ்வு ரத்து செய்யப்பட்டது தொடா்பாக யுஜிசி தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘தோ்வில் சிலா் இடையூறு ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் மாணவா்களின் நலன் கருதி தோ்வு ரத்து செய்யப்பட்டது. இடையூறு ஏற்படுத்த முயற்சித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.