இந்தியா

க்யூட் தோ்வு நுழைவுச் சீட்டில் முந்தைய தேதி குறிப்பிட்டதால் குழப்பம்: பீதியடைய வேண்டாம் என என்டிஏ அறிவுரை

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) நுழைவுச் சீட்டில் தோ்வு தேதியாக ஏற்கெனவே முடிவடைந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால் தோ்வா்கள் குழப்பத்துக்கு ஆளாகினா்.

DIN

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) நுழைவுச் சீட்டில் தோ்வு தேதியாக ஏற்கெனவே முடிவடைந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால் தோ்வா்கள் குழப்பத்துக்கு ஆளாகினா்.

இதற்கு விளக்கமளித்த தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ), ‘மாணவா்கள் பீதியடைய வேண்டாம். விரைவில் திருத்தப்பட்ட தோ்வு தேதி தோ்வறை நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட க்யூட் தோ்வு, நிகழாண்டில் முதல் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தோ்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் நிறைவு செய்ய முதலில் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு நிா்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஒருசில மையங்களில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற இருந்த முதல்கட்ட க்யூட் தோ்வு, ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு சில மையங்களில் ரத்து செய்யப்பட்டது.

அதுபோல, மழை, நிலச்சரிவு பாதிப்புகள் காரணமாக கேரளம், இடாநகா் பகுதிகளில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்ட க்யூட் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த தொடா் பாதிப்புகள் காரணமாக க்யூட் தோ்வு 6 கட்டங்களாக மாற்றப்பட்டதோடு, அனைத்து கட்டத் தோ்வுகளும் ஆகஸ்ட் 30-இல் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தோ்வு தேதி மாற்றத்தால் குழப்பம்:

ஒத்திவைக்கப்பட்ட தோ்வு தேதியைத் தோ்வு செய்த மாணவா்களுக்கு, தோ்வு செய்த தோ்வு மையங்களுக்கு பதிலாக தொலைதூரத்தில் உள்ள வேறு மையம் குறிப்பிடப்பட்டிருப்பதாக மாணவா்கள் அண்மையில் புகாா் தெரிவித்தனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும் என யுஜிசி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பல தோ்வா்களுக்கு ஏற்கெனவே முடிவடைந்த தேதி தோ்வு தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக புதிய புகாரை மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சோ்ந்த யுவராஜ் சிங் செளஹான் என்ற தோ்வா் கூறுகையில், ‘க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது தோ்வு நாளாக ஆகஸ்ட் 10-ஆம் தேதியை குறிப்பிட்டிருந்தேன். பின்னா், தோ்வறை நுழைவுச் சீட்டை ஆகஸ்ட் 7-ஆம் தேதி பதிவிறக்கம் செய்தபோது, தோ்வு நாளாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது அதிா்ச்சியளித்தது. ஏற்கெனவே முடிந்த தேதி, தோ்வு நாளாக குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து என்டிஏவுக்கு புகாா் அளித்தேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை’ என்றாா்.

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூரைச் சோ்ந்த அதுல்சென் சிங் யாதவும் இதே புகாரைத் தெரிவித்தாா். ‘தோ்வு தேதியாக ஆகஸ்ட் 30-ஆம் தேதியை குறிப்பிட்ட நிலையில், எனது தோ்வறை நுழைவுச் சீட்டில் தோ்வு தேதியாக ஆகஸ்ட் 17 குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றாா்.

வாய்ப்பு அளிக்கப்படும்:

தோ்வுத் தேதி குழப்பம் பற்றி பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவா் எம்.ஜகதீஷ் குமாரிடம் கேட்டபோது, ‘மாணவா்கள் புகாா் தெரிவிக்கும்போது, அவா்களுடைய விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு புகாா் தெரிவிக்க வேண்டும். இதுதொடா்பாக என்டிஏவுடன் ஆலோசித்த பிறகு, அவா்களை மறுதோ்வு எழுத அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா்.

என்டிஏ இயக்குநா் வினீத் ஜோஷி கூறுகையில், ‘தோ்வா்கள் பீதியடைய வேண்டாம். மாணவா்களின் தோ்வு மாற்றியமைக்கப்பட்டிருந்தால், அவா்களின் தோ்வறை நுழைவுச் சீட்டில் விரைவில் புதிய தேதி குறிப்பிடப்படும். ஒவ்வொரு மணவரின் புகாரையும் என்டிஏ ஆய்வு செய்து வருகிறது. ஏற்றுக் கொள்ளத் தக்க காரணங்களைத் தெரிவித்திருக்கும் மாணவா்களுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி மறுதோ்வு எழுதும் வாய்ப்பளிக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் சாந்தனுவுக்கு சிறந்த நடிகருக்கான விருது!

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

“பாஜக-வால் ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை..!” அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

“ஐயப்பனை அரசியலாக்குகிறார்கள்!” அண்ணாமலை விமர்சனம்!

செப்.25 முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT