இந்தியா

ரூ.3.25 லட்சம் கோடி கூடுதல் மானிய கோரிக்கை மசோதா தாக்கல்

DIN

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.3.25 லட்சம் கோடி நிகர செலவினத்துக்கான துணைநிலை மானிய கோரிக்கை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அரசின் தொகுப்பு நிதியில் இருந்து கூடுதல் துணைநிலை மானியம் கோரும் முதல் தொகுதி மசோதாவை மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் ரூ.4.36 லட்சம் கோடியை கூடுதல் செலவுக்காக மத்திய அரசு கோரியுள்ளது.

கூடுதல் செலவில் ரூ.1.10 லட்சம் கோடியானது பல்வேறு அமைச்சகங்களின் சேமிப்பு மூலம் ஈடுகட்டப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகர செலவினம் ரூ.3.25 லட்சம் கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரங்களுக்கான கூடுதல் மானியமாக ரூ.1.09 லட்சம் கோடியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதிக்கு ரூ.4,920 கோடியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு உணவு தானியங்களை விநியோகிப்பதற்காக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு ரூ.80,348 கோடியும், தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு ரூ.13,669 கோடியும், ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.12,000 கோடியும் வழங்கப்படவுள்ளது.

ஏழைகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்புக்கான மானியமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க ரூ.29,944 கோடி பெட்ரோலிய அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படவுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு வழங்க ரூ.10,000 கோடி கோரப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.46,000 கோடி கூடுதல் மானியம் கோரப்பட்டுள்ளது.

மூலதன செலவினம் அதிகரிப்பு: நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மூலதன செலவினம் ரூ.7.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் அது 35.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் அரசின் மூலதன செலவினம் கூடுதலாக சுமாா் ரூ.31,000 கோடி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு கூடுதலாக சுமாா் ரூ.19,198 கோடி வழங்கப்படவுள்ளது.

மக்களவை ஒப்புதல் அளித்த பிறகு மானிய கோரிக்கை மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT