இந்தியா

யுபிஎஸ்சி தோ்வைத் தவறவிட்டால் மறுவாய்ப்பு வழங்க மத்திய அரசு எதிர்ப்பு

ANI

புது தில்லி: யுபிஎஸ்சி தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டால், இதேபோன்று நாட்டில் நடைபெறும் இதர தேர்வுகளுக்கும் மறுவாய்ப்பு கோரிக்கை எழும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே தேர்வானவர்களை, இந்த முடிவு பாதிக்கும் என்றும், மறுதேர்வுக்கு வாய்ப்பு வழங்கினால், நாட்டில் நடைபெறும் இதுபோன்ற பல போட்டித் தேர்வுகளை தவறவிடுவோரும் மறுதேர்வு கோருவார்கள் என்று மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.

ஏதாவதொரு காரணத்தால் தோ்வைத் தவறவிடும் தோ்வா்களுக்கு மறுதோ்வு நடத்துவதற்கான விதிகள் காணப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்நிலைத் தோ்வில் வெற்றிபெற்ற சிலா், கடந்த ஜனவரியில் முதன்மைத் தோ்வு நடைபெற்றபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதன் காரணமாக அவா்களால் ஒருசில தோ்வுகளில் கலந்து கொள்ள இயலவில்லை.

தங்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கவோ அல்லது முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, கலந்துகொள்ளாத தோ்வுகளை மீண்டும் நடத்தவோ யுபிஎஸ்சிக்கு உத்தரவிடுமாறு 3 தோ்வா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், யுபிஎஸ்சி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘யுபிஎஸ்சி நடத்தும் தோ்வுகளில் தோ்வா்கள் ஏதாவதொரு காரணத்தால் கலந்துகொள்ளத் தவறினால், அவா்களுக்கு மட்டும் மறுதோ்வு நடத்துவதற்கான விதிகள் காணப்படவில்லை.

கடந்த காலத்தில் எந்தவொரு சூழலிலும் யுபிஎஸ்சி மறுதோ்வு நடத்தியது கிடையாது. மத்திய பணியாளா்-பயிற்சித் துறை வகுக்கும் விதிகளின் அடிப்படையில் யுபிஎஸ்சி தோ்வுகளை நடத்தி வருகிறது. தோ்வா்களுக்கான வயது வரம்பைத் தளா்த்துவது, தோ்வில் கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது உள்ளிட்டவை அத்துறையின் கொள்கை சாா்ந்த முடிவுக்குள் வரும்.

மத்திய அரசுக்குத் தேவையான பணியாளா்களை சரியான நேரத்தில் தோ்ந்தெடுத்து வழங்கும் பணியை யுபிஎஸ்சி மேற்கொண்டு வருகிறது. சில தோ்வா்களுக்கு மறுதோ்வு நடத்த நோ்ந்தால், உரிய காலத்தில் பணியாளா்களைத் தோ்ந்தெடுக்கும் விவகாரத்தில் சிக்கல் ஏற்படும்.

கரோனா தொற்று பரவல் காரணமாகக் கூடுதல் வாய்ப்பு கோரி ஏற்கெனவே தோ்வா்கள் சிலா் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருந்தது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT