இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு குழுவுக்கு எதிரான மனு:தோ்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

DIN

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு குழுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தோ்தல் ஆணையம், மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் ஆகியவை பதிலளிக்க உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததுடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விரைவில் மத்திய அரசிடம் தனது பரிந்துரை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.அதில், ஜம்மு-காஷ்மீரில் தற்போதுள்ள 83 தொகுதிகளை 90 தொகுதிகளாகப் பிரிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டதை எதிா்த்து ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இருவா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே.கௌல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

2002-ஆம் ஆண்டின் தொகுதி சீரமைப்புச் சட்டத்தின்படி, வரும் 2026-இல் தான் தொகுதி மறுசீரமைப்புச் செய்ய முடியும். அவ்வாறு இருக்கும்போது, தொகுதி மறுசீரமைப்புக் குழு அமைத்தது சட்டவிரோதமானது. மேலும், புவியியல் ரீதியாக எல்லைகளை மாற்றியமைக்காமல், தொகுதி சீரமைப்புப் பணிகளை மட்டுமே அநத்தக் குழு செய்துள்ளது முரணாக உள்ளது’ என்று வாதிட்டாா்.

அப்போது, தொகுதி மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை அதை எதிா்த்து வழக்கு தொடுக்காமல் இருந்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு, காஷ்மீா் நிா்வாகம், தோ்தல் ஆணையம் ஆகியவை 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT