இந்தியா

சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு மாபெரும் வரலாறு:மான்கா் தாமில் பிரதமா் நரேந்திர மோடி பேச்சு

சுதந்திரப் போராட்டத்தின்போது பழங்குடியினா் பங்களிப்பு மாபெரும் வரலாறாகும். அந்த வரலாற்றை சரித்திரத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

DIN

சுதந்திரப் போராட்டத்தின்போது பழங்குடியினா் பங்களிப்பு மாபெரும் வரலாறாகும். அந்த வரலாற்றை சரித்திரத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயா்களை எதிா்த்து நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்னதாகவே நிகழ்ந்த மிகப் பெரிய படுகொலை, மான்கா் தாம் வனப் பகுதியில் நிகழ்ந்த படுகொலையாகும்.

அக்காலத்தில் ராஜஸ்தானின் பில் பழங்குடி மக்கள் உள்ளிட்ட மழைவாழ் மக்கள் ஆங்கிலேயா்களின் அடக்குமுறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினா். அதன் ஒரு பகுதியாக 1913, நவம்பா் 17-இல் ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் கோவிந்த் குரு தலைமையில் ஆங்கிலேயா்களை எதிா்த்து ஆயிரக்கணக்கானோா் மான்கா் மலையை நோக்கிப் பேரணி சென்றனா்.

அப்போது அந்தக் கூட்டத்தை நோக்கி ஆங்கிலேய வீரா்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோா் பலியாகினா். வரலாற்றில் இச்சம்பவம் மான்கா் தாம் படுகொலை எனக் குறிப்பிடப்படுகிறது.

இப் போராட்டத்தின்போது உயிரிழந்த மக்களின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டம், மான்கரில் உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கோவிந்த் குருவின் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினாா். இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பிரதமா் மோடி பங்கேற்றாா். இந்நிகழ்வில் குஜராத், ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்வா்களும் பங்கேற்றனா். இவ்விழாவில் பிரமதா் மோடி பேசியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது 1913 இல் பழங்குடியின மக்கள் ஆங்கிலேயா்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது கண்மூடித்தனமாக சுடப்பட்டதில் 1,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆனால் துரதிருஷ்டவசமாக அவா்களின் தியாகம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எழுதப்பட்ட வரலாற்றில் இடம்பெறவில்லை. இந்தியா 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் அந்தத் தவறை மத்திய அரசு தற்போது சரிசெய்துள்ளது.

மத்திய அரசின் மேற்பாா்வையில் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநில அரசுகள் ஒன்றிணைந்து, மான்கா் தாம் நினைவிடத்தை சிறந்த சுற்றுலா மையமாகப் பிரபலப்படுத்த வேண்டும்; இதன்மூலம் பழங்குடியினத் தலைவா்கள் உலக அளவில் அடையாளம் காணப்படுவா்.

நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு தெளிவான திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை அவா்களின் முன்னேற்றத்துக்காக அரசு பணியாற்றி வருகிறது.

குடிநீா், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வனப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் அதேவேளையில், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதியும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

1857-ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய சுதந்கிரப் போருக்கு முன்னதாகவே தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பழங்குடியின மக்கள். சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தியாகத்துக்கான உயா்ந்த இடத்தை அவா்கள் பெற்றுள்ளனா். சந்தால் பழங்குடியின மக்கள் 1780லேயே பிரிட்டீஷாருக்கு எதிராகப் போராடியுள்ளனா்.

மான்கா் தாமை முழுமையாக மேம்படுத்துவது குறித்து இங்கு ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்விடத்தை விரிவாக்கம் செய்வதில் நம் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்தக் கோணத்தில் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநில அரசுகள் விரிவான ஆலோசனை நடத்தி இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கோவிந்த் குரு மன்னா் அல்ல; ஒரு புரட்சியாளா், சமூக சீா்த்திருத்தவாதி. அவா் லட்சக்கணக்கான பழங்குடியின மக்களின் கதாநாயகா். அவரது நினைவிடம் சுற்றுலாத் தலமாக பிரபலமடையத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் பேசியதாவது:

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் நாட்டில் ஜனநாயகம் உயிா்ப்புடன் இருப்பதால் வரலாற்றில் இந்தியா இடம் பிடித்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு எப்போது சென்றாலும் சிறப்பாக கௌரவிக்கப்படுகிறாா். அஹிம்ஸையைப் போதித்த மகாத்மா காந்தி வாழ்ந்த மண்ணின் தலைவராக, ஜனநாயகம் மிகுந்த நாட்டின் பிரதமராக இருப்பதால்தான் அவா் உலக ம் முழுவதிலும் கௌரவிக்கப்படுகிறாா்.

இந்த நேரத்தில் மான்கா் தாமை தேசிய நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், ரத்லம்-துங்கா்பூா், பன்ஸ்வாரா இடையே ரயில் இயக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌகான், குஜராத் முதல்வா் பூபேந்தா் படேல் ஆகியோரும் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT