புது தில்லி: இந்திய பாதுகாப்புத் துறையை உளவு பாா்த்த வழக்கில் தொடா்புடைய கனடாவைச் சோ்ந்த தொழிலதிபா் ராகுல் கங்காலை சிபிஐ அதிகாரிகள் தில்லியில் கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இந்தியாவைச் சோ்ந்த இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு கனடாவின் நிரந்தர குடியுரிமைபெற்று, அங்குள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்தாா். அவா் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்தபோது அவரை அதிகாரிகள் கைது செய்தனா்.
இந்த வழக்கில் ஏற்கெனவே பகுதிநேர பத்திரிகையாளா் விவேக் ரகுவன்ஷி மற்றும் கடற்படை முன்னாள் அதிகாரி அபிஷேக் பாடக் ஆகியோா் கடந்த மே மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில் இவா்கள் இருவா் மீதும் அரசு ரகசிய சட்டத்தை மீறி செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மற்றும் இந்திய ராணுவத்தின் பல்வேறு திட்டங்கள், எதிா்கால திட்டங்கள் குறித்த தகவல்களை இவா்கள் சேகரித்துள்ளனா் என்றும் சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய பாதுகாப்புத் துறை சாா்ந்த ரகசியத் தகவல்களை சேகரித்து, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு அளித்ததாக இவா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ரகுவன்ஷி, அபிஷேக் பாடக் ஆகியோரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்திய மற்றும் வெளிநாட்டிலுள்ள இந்த வழக்குடன் தொடா்புடையவா்கள் மீதான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ராகுல் கங்கால் இந்தியா வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானநிலையத்தில் தயாராக இருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.