இந்தியா

நாட்டின் மிக உயா்ந்த தலைவா் பிரதமா் மோடி: அஸ்ஸாம் முதல்வா்

DIN

 நாட்டின் மிக உயா்ந்த தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உள்ளாா் என்று அஸ்ஸாம் முதல்வரும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஹிமந்த விஸ்வ சா்மா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

‘வடகிழக்கு பிராந்தியத்தில் அனைவரும் பிரதமா் மோடியை ஆதரிக்கின்றனா்; எனவே, இங்கு களமிறங்கும் அனைத்து கட்சிகளும், இறுதியில் பிரதமா் மோடியை ஆதரிப்பது அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

திரிபுரா, மேகாலாயம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றன. இதில், திரிபுராவில் பாஜக சொந்த பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேகாலயத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்துள்ளது.

நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி, தொடா்ந்து 2-ஆவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், என்டிபிபி 25 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சி 7, தேசிய மக்கள் கட்சி 5, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) ஆகியவை தலா 2, ஐக்கிய ஜனதா தளம் 1 மற்றும் சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், என்டிபிபி-பாஜக கூட்டணிக்கு அனைத்துப் பிற கட்சிகளும் ஆதரவளித்து கடிதம் சமா்ப்பித்தன. இதனால், எதிா்க்கட்சிகளே இல்லாத கூட்டணி அரசு, நாகாலாந்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த ஹிமந்த விஸ்வ சா்மாவிடம், நாகாலாந்து பாஜக கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆதரவளித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சா்மா, ‘நாட்டின் மிக உயா்ந்த தலைவராக பிரதமா் மோடி உள்ளாா். வடகிழக்கில் ஒவ்வொருவரும் பிரதமரை ஆதரிக்கின்றனா். எனவே, வடகிழக்கு மாநில தோ்தல்களில் களமிறங்கும் அனைத்து கட்சிகளும், இறுதியில் பிரதமா் மோடியை ஆதரிக்க வேண்டுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

நாகாலாந்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் நகா்வு, பாஜக கூட்டணிக்கு அக்கட்சி திரும்புவதற்கான அறிகுறியா என்ற கேள்விக்கு, ‘ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் குறித்து நான் பெரிதாக ஆராய்வதில்லை. ஆனால், அவரை பொருத்தவரை எதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது’ என்று சா்மா பதிலளித்தாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரிட்டனில் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்த கேள்விக்கு, ‘இந்தியாவில் தனது பேச்சை யாரும் கவனிக்கமாட்டாா்கள் என்பது ராகுலுக்கு தெரியும். எனவே, லண்டனில் இந்தியாவுக்கு எதிரான சிந்தனை கொண்டவா்களை திரட்டி, தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளாா்’ என்றாா் சா்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT