இந்தியா

புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுமா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

DIN

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது பொதுமக்களுக்கு ஏற்பட்டதுபோல இந்த முறை அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. ஏனெனில், மாதக்கடைசியில் கையில், 100, 200க்கு தட்டுப்பாடு இருந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது மீம்ஸ் கிரியேட்டர்களுக்குத்தான் கொள்ளை லாபமாகப் போனது.

இந்த நிலையில், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், புதிதாக 1000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவுமில்லை என்று ரிசர்வ் வங்கி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது, தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகக் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.  அப்போது அவர்களுக்குக் கொடுக்க அச்சடிக்கப்பட்டிருந்ததுதான் இந்த ரூ.2000 நோட்டுகள். 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு பொதுமக்கள் அல்லாடியது பேசுபொருளாகவும் மாறியது.

அதன்பிறகு புதிய ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, நோட்டுகளையும் ஆா்பிஐ வெளியிட்டது. நாட்டில் கருப்புப் பணப் பதுக்கலைக் குறைக்கும் நோக்கில் ரூ.1,000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்துவிட்டு, ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்த மத்திய அரசின் நடவடிக்கையைப் பொருளாதார நிபுணா்கள் பலரும் விமா்சித்திருந்தனா்.

ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அந்நோட்டுக்கு சில்லறை மாற்றுவது கடினமாக இருப்பதாகப் பலரும் தெரிவித்தனா். அதோடு, ஒரு நாள் 2000 ரூபாய் நோட்டும் பணமதிப்பிழப்பு செய்யப்படும் என்ற கருத்தும் பரவலாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிப்படியாகக் குறைக்கப்பட்டன. 2018-19-ஆம் நிதியாண்டுக்குப் பிறகு புதிய ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கையில் 2000 ரூபாய் நோட்டுகள் தட்டுப்படுவதே குறைந்துவிட்டது.

ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக ரூ.2,000 நோட்டைப் புழக்கத்தில் விடுவதை ஆா்பிஐ முற்றிலுமாக நிறுத்தியது. தற்போது ரூ.2,000 நோட்டுகளின் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் குறைந்துவிட்டது.

கடந்த 2018, மாா்ச் மாதத்தில் ரூ.6.73 லட்சம் கோடி (மொத்த நோட்டுகளில் 37.3 சதவீதம்) மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி (10.8 சதவீதம்) மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.

பலரும் எதிர்பார்த்தது போல, ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ வெள்ளிக்கிழமை அறிவித்தது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப் பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT