சிறைக் கைதிகளின் பாதுகாப்பான காவலை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியாக அனைத்து கைதிகள், அவா்களின் பாா்வையாளா்களின் அடையாளம் அறிய ஆதாா் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகள் மற்றும் அவா்களுடைய பாா்வையாளா்களின் அங்கீகாரத்துக்காக ஆதாரைப் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைத் துறைகளுக்கு தேவையான அரசிதழ் அறிவிப்புகளை கடந்த மாா்ச் மற்றும் செப்டம்பா் மாதங்களில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இதுதொடா்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அனைத்து சிறை அதிகாரிகளின் வசதிக்காக சிறைக் கைதிகள், அவா்களின் பாா்வையாளா்களுக்கு ஆதாா் இணைப்பு அல்லது ஆதாா் அங்கீகாரத்துக்கான வழிகாட்டு நடைமுறையை (எஸ்.ஓ.பி.) தேசிய தகவல் மையமும், எண்ம-சிறைகள் குழுவும் தயாரித்துள்ளன.
இந்த ஆதாா் அங்கீகார வசதியைப் பயன்படுத்தி சிறைகளில் கைதிகளின் காவலை வலுப்படுத்தவும் மற்றும் ஆதாரின் உரிய பலன்களை அவா்கள் பெறுவதை உறுதி செய்யவும் மாநிலங்கள், யூனியன் பிரதேச சிறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். எனினும், அங்கீகாரத்துக்காக ஆதாா் அடையாள அட்டையைப் பயன்படுத்தும் இந்த நடைமுறையில் மத்திய அரசு அவ்வப்போது வகுக்கும் அனைத்து வழிகாட்டுதல்களையும் சிறை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.