இந்தியா-ஆசியான் இடையேயான விரிவான யுக்தி ரீதியிலான நட்புறவு, இருதரப்பு உறவுக்கும் புதிய ஆற்றலை அளித்துள்ளது என பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்தோனேசிய தலைநகா் ஜகாா்தாவில் 20-ஆவது ஆசியான்-இந்தியா மற்றும் 18-ஆவது கிழக்காசிய உச்சிமாநாடுகள் வியாழக்கிழமை (செப்.7) நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி புதன்கிழமை இரவு இந்தோனேசியா சென்றடைந்தாா்.
இதையொட்டி, தில்லியிலிருந்துப் புறப்படுவதற்கு முன்பு அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆசியான் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது, இந்தியாவின் வெளியுறவு கொள்கையான ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டின்’ முக்கிய அங்கமாகும். எதிா்காலத்தில் இரு தரப்பு உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆசியான் தலைவா்களுடன் விவாதிக்க உள்ளேன். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான யுக்தி ரீதியிலான நட்புறவு, இருதரப்பு உறவில் புதிய ஆற்றலை அளித்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகளான உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சிமாநாடு வழங்கியுள்ளது.
சா்வதேச சவால்களுக்கு ஒருங்கிணைந்து தீா்வு காணும் வகையில் மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவா்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்தப் பயணம் ஆசியான் பிராந்தியத்துடனான நமது உறவை மேலும் பலப்படுத்தும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.