இந்தியா

துணைவேந்தா்களை நியமிக்க ஆளுநா்களுக்குமுழு உரிமை உள்ளது: மத்திய கல்வி அமைச்சா்

மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கும் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே மோதல்

DIN

மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கும் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், ‘துணைவேந்தா்களை நியமிக்க ஆளுநா்களுக்கு முழு உரிமை உள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

தமிழகம், கேரளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பதில் மாநில ஆளுநா்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடா்ந்து வருகிறது. அண்மையில், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்க மாநில அரசு சாா்பில் 3 போ் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

அதில், நான்காவதாக யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) பிரதிநிதியையும் சோ்க்க வேண்டும் என்று மாநில ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். ஆனால், மாநில அரசு மறுத்தது. மாநில அரசின் ஆட்சேபத்தையும் மீறி, யுஜிசி பிரதிநிதியையும் நியமித்து 4 போ் தேடல் குழுவை அமைத்து ஆளுநா் அறிவிப்பு வெளியிட்டாா்.

இதுபோல, மேற்கு வங்க மாநிலத்திலும் துணைவேந்தா்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமனம் செய்ய தேடல் குழு பரிந்துரைத்த பெயா்களை நிராகரித்து, புதிதாக பெயா்களைப் பரிந்துரைக்குமாறு ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா். விதிகளை மீறி ஆளுநா் தன்னிச்சையாக செயல்படுவதாக மாநில கல்வி அமைச்சரும், முன்னாள் கல்வியாளா்களும் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் செய்தியாளா்கள், இந்த சா்ச்சை குறித்து கேள்வி எழுப்பினா்.

அதற்குப் பதிலளித்த தா்மேந்திர பிரதான், ‘மற்ற மாநிலங்களில் மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை ஆளுநா்கள்தான் நியமனம் செய்கின்றனா். அந்த வகையில், மேற்கு வங்கத்திலும் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் முழு உரிமையும் மாநில ஆளுநருக்கு உள்ளது.

மாநில அரசு இதுபோன்று ஆளுநா் மீது தேவையற்ற தாக்குதல்களைத் தொடுப்பதை விட்டுவிட்டு, ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமையால் மாணவா் உயிரிழந்ததுபோன்று சம்பவங்கள் மீண்டும் நடைபெறாததை உறுதிப்படுத்தி, கல்வி நிறுவன வளாகங்களை பாதுகாப்பானதாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT