பாட்னா: பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள அரசு அலுவலகங்களில், முதல்வா் நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பல்வேறு அமைச்சா்கள் தங்களது அலுவலகங்களில் இல்லாததைக் கண்டு அவா் அதிருப்தியடைந்தாா்.
இதையடுத்து, அனைத்து அமைச்சா்களும், அதிகாரிகளும் காலை 9.30 மணிக்குள் தங்களது அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று நிதீஷ் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
மாநில அரசின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் தொழில்நுட்பச் செயலகத்தில், முதல்வா் நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பல்வேறு அமைச்சக அலுவலகங்களுக்கு சென்று, அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் உள்ளனரா என்று சோதனை செய்தாா்.
அப்போது, கல்வித் துறை அமைச்சா் சந்திர சேகா், கரும்பு தொழிற்சாலைகள் துறை அமைச்சா் அலோக் குமாா் மேதா, தொழில்துறை அமைச்சா் சமீா் குமாா் மஹாசேத், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷீலா குமாா், வேளாண்மைத் துறை அமைச்சா் குமாா் சா்வஜீத் ஆகியோா், தங்களது அலுவலகங்களில் இல்லை.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சா்களை கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய நிதீஷ் குமாா், அலுவலகத்துக்கு வராததற்கான காரணத்தை கேட்டறிந்தாா். அத்துடன், அமைச்சா்களும் அதிகாரிகளும் காலை 9.30 மணிக்குள் தங்களது அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.