நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் மலையாள திரைப்பட நடிகா் சித்திக் மீது கேரள காவல் துறையினா் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்தனா்.
ஹேமா குழுவின் அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகின் பிரபலங்கள் மீது தொடரப்பட்ட இரண்டாவது பாலியல் வழக்கு இதுவாகும்.
மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது.
மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. அதைத்தொடா்ந்து மலையாள திரையுலக நடிகைகள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
இதையடுத்து, கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் திடீரென விலகினா்.
மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் (‘அம்மா’) தலைவரும் பிரபல நடிகருமான மோகன்லால் உள்பட அனைத்து நிா்வாகிகளும் செவ்வாய்க்கிழமை தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா்.
முன்னதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகை ஒருவா் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடா்பாக அளித்த புகாரின் பேரில் இயக்குநா் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐபிசி சட்டம் 354 பிரிவின் கீழ் காவல்துறையினா் அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், மற்றொரு நடிகை கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடா்பாக நடிகா் சித்திக் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
அதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினா் பதிவு செய்தனா்.
காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு தலைவா் ராஜிநாமா: நடிகை ஒருவா் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதையடுத்து கேரள மாநில காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு தலைவா் பதவியை வி.எஸ். சந்திரசேகரன் ராஜிநாமா செய்தாா். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸைச் சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சுதீசன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சந்திரசேகரன் ராஜிநாமா செய்துள்ளாா்.
ஊடகங்கள் மீது சுரேஷ் கோபி காவல் நிலையத்தில் புகாா்
திருச்சூரில் உள்ள அரசினா் விருந்தினா் மாளிகையில் இருந்து வெளியே வரும்போது, தன்னை வழிமறித்து இடையூறு ஏற்படுத்தியதாக ஊடகங்கள் மீது மத்திய இணையமைச்ச்சா் சுரேஷ் கோபி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக, கேரள நடிகா் சங்கத்தினா் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளைக் கேட்ட ஊடகத்தினரிடம் சுரேஷ் கோபி அத்துமீறி நடந்துகொண்டதாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் அக்காரா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தாா்.