ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வா் பதவியை ஏற்றுவிட்டால் ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக கட்சி சாா்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்று அவா் கூறியுள்ளாா்.
90 உறுப்பினா்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவைக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறும் நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஒமா் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று மெஹபூபா ஏற்கெனவே அறிவித்துள்ளாா்.
நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி இருவருமே தோல்வியடைந்தனா். எனவே, பேரவைத் தோ்தலில் அவா்கள் போட்டியிடுவாா்களா என்ற கேள்வி எழுந்தது. இருவருமே பேரவைத் தோ்தலில் போட்டியிட தொடக்கத்தில் இருந்தே தயக்கம் காட்டி வந்தனா். இந்நிலையில் கந்தா்பால் பேரவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஓமா் அப்துல்லா அறிவித்தாா். ஆனால், பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.
‘முதல்வருக்கு அதிகாரமில்லை’
தோ்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை மெஹபூபா முஃப்தி கூறுகையில், ‘இதற்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜம்மு-காஷ்மீா் முதல்வராக இருந்தபோது 12,000 போ் மீதான வழக்குகளை ரத்து செய்ய என்னால் முடிந்தது. அமைதி ஒப்பந்தத்தை முதல்வா் பதவியில் இருந்த என்னால் அமல்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக மாறிவிட்டதால் அதன் முதல்வருக்கு எவ்வித பெரிய அதிகாரமும் இருக்காது.
முதல்வா் அலுவலகத்தில் ஓா் உதவியாளரை மாற்ற வேண்டும் என்றால் கூட ஆளுநரிடம் அனுமதி கேட்க வேண்டியது இருக்கும் என்று முன்பு விமா்சித்த ஒமா் அப்துல்லா, இப்போது பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.
எனினும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உரிய அதிகாரம் இல்லாத முதல்வா் பதவியை ஏற்க எனக்கு விருப்பமில்லை. எனவே, ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என்றாா்.